காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் குறிப்பிடப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 52வது தேவாரத்தலமாகும்.
இறைவன் : அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார்.
இறைவி: அபீதகுஜாம்பாள், உண்ணாமுலை.
கோயில் அமைப்பு:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. ஆறு பிரகாரங்கள், 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில் இது. சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் கோயிலின் உள்ளேயே அமைந்துள்ளது சிறப்பு.
தல வரலாறு:
படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்த சிவபெருமான் அவர்கள் முன் ஜோதி வடிவில் தோன்றினார். இருவரும் சிவனிடம் முறையிட்டனர். அப்போது சிவன் யார் தனது அடிமுடியை கண்டு வருகிறீர்களோ அவரே உயர்ந்தவர் எனக் கூறினார். விஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அது போய்க் கொண்டே இருந்தது. திரும்பி வந்து சிவனிடம் தன்னால் கண்டறிய முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து சிவபெருமானின் முடியை கண்டு வர கிளம்பினார். அவரால் காண முடியவில்லை என்றார். சிவபெருமானே முழு முதற் கடவுள் என்பதை உணர்ந்து கொண்டு அவரை வணங்கி நின்றனர். சிவபெருமானும் சோதி வடிவிலிருந்து ஒரு மலையாக மாறி காட்சி கொடுத்தார். அந்த மலை தான் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார்.
பிரம்மா அன்னப்பறவையாக உருவெடுத்து முடியை காண்பதற்கு உயரே சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் அப்பொழுது சிவனின் தலையில் இருந்த தாழம்பூ இதழ் கீழாய் வீழ்ந்து கொண்டிருந்தது. பிரம்மா அந்த தாழம்பூ இதழிடம் தானே அதை சிவ பெருமானின் தலையில் இருந்து எடுத்ததாக சாட்சி கூறுமாறு கேட்டுக்கொண்டார். தாழம் பூவும் அதை ஏற்றுக்கொண்டது. பிரம்மா தன்னால் அடிமுடியை காணவில்லை என்பதை மறைத்து சிவபெருமானின் தலையில் இருக்கும் தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல வைத்து தான் கண்டுவிட்டதாக பொய்யுரைத்தார். இதையறிந்த சிவன் கோபமுற்று இனி உனக்கு பூமியில் கோயிலோ, பூஜையோ கிடையாது என சாபமிட்டார். அதே போல் தாழம்பூவையும் இனி தனது பூஜையில் உன்னை பயன்படுத்தமாட்டார்கள் என்று கூறிவிட்டார். அதன் காரணமாகத்தான் இன்றளவும் சிவாலயங்களில் தாழம்பூவை மட்டும் படைக்க மாட்டார்கள்.
இறைவன் இத்தலத்தில் சுயம்புலிங்கத் திருமேனியாக நாகக் கிரீடம் அணிந்து தூய வெண்ணிற ஆடையுடன் அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கருவரை கோஷ்டத்தில் ஈசனின் பின்புறம் லிங்கோத்பவர் எழுந்தருளியிருக்கிறார். இறைவன் சந்நிதியை அடுத்து உண்ணாமுலை அம்மை தனிக் கோவிலில் கருவறையில் காட்சி தருகிறாள்.
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
வட்ட னைம்மதி சூடியை வானவர் சிட்ட னைத்திரு வண்ணா மலையனை இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும் அட்ட னையடி யேன்மறந் துய்வனோ.
முண்டந் தரித்தீர் முதுகா டுறைவீர் முழுநீறு மெய்பூசு திர்மூக்கப் பாம்பைக் கண்டத்தி லும்தோளி லும்கட்டி வைத்தீர் கடலைக் கடைந்திட்ட தோர்நஞ்சை உண்டீர் பிண்டஞ் சுமந்தும் மொடும்கூட மாட்டோம் பெரியா ரொடுநட் பினிதென் றிருத்தும் அண்டம் கடந்தப் புறத்தும் இருந்தீர் அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே.
மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று ஓலம் இடினும் உணராய் உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.
கருத்துகள்