66. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)

இறைவன் : மல்லிகார்ச்சுனர், ஸ்ரீசைலநாதர், சீபர்ப்பதநாதர்.

இறைவி : பிரமராம்பிகை. 



தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 268  ஆவது தலம் மற்றும் வட நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் முதலாவது தலம். சந்திரவதி என்னும் பெண் அடியவர், மல்லிகை மலர்களைக் கொண்டு இப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டதால் இத்தலத்து இறைவன் மல்லிகார்ச்சுனர் என்று பெயர் பெற்றார். 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் இதுவும் ஒன்று மற்றும் 51 சக்தி பீடங்களில் இது சைல சக்தி பீடம் ஆகும். 


சிலாத முனிவர் குழந்தை வரம் வேண்டி தவஞ்செய்த தலமாதலின் இஃது ஸ்ரீசைலம் எனப்படுகிறது. சிவனின் அருளால் சிலாதருக்கு நந்தி, பர்வதன் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். குழந்தைகளை பார்க்க வந்த சனகாதி முனிவர்கள் நந்தி சில காலம் மட்டுமே பூமியில் வாழ்வார் எனக் கூறினர். இதனால் வருத்தம் அடைந்த சிலாதரிடம்  நந்தி தேவர், "தந்தையே!  நான் சிவனைக் குறித்து தவமிருந்து சாகா வரம் பெறுவேன்" என்றார். அது போலவே,  இத்தலத்தில் தவஞ்செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றலைப் பெற்றார் என்றும்; நந்தியே இங்கு மலையாக இருந்து பெருமானைத் தாங்குகிறார் என்றும் தலபுராணம் கூறுகிறது.

சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான்
இடுமணி யெழிலானை யேறலன் எருதேறி
விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்
படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.
- திருஞானசம்பந்தர்

 சகன்றினார் புரங்கள் மூன்றுங் 
  கனலெரி யாகச் சீறி
நின்றதோ ருருவந் தன்னால் 
  நீர்மையும் நிறையுங் கொண்டு
ஒன்றியாங் குமையுந் தாமும் 
  ஊர்பலி தேர்ந்து பின்னும்
பன்றிப்பின் வேட ராகிப் 
  பருப்பத நோக்கி னாரே.
- திருநாவுக்கரசர்

மானும்மரை இனமும்மயில் இனமுங்கலந் தெங்குந்
தாமேமிக மேய்ந்துதடஞ்சுனைநீர்களைப் பருகிப்
பூமாமரம் உரிஞ்சிப்பொழிலூடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழல்துயில் சீபர்ப்பத மலையே.
- சுந்தரர்

கருத்துகள்