இறைவன் : ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர்.
இறைவி : ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை.
தொண்டை நாட்டில் உள்ள தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் 19 ஆவது தலம். ஸ்ரீ(சீ) - காளம் - அத்தி = சிலந்தி - பாம்பு - யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம். பஞ்சபூத தலங்களுள் இது வாயுத் தலம். தட்சிண (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது. கண்ணப்பர் வழிபட்டு இறைவனுடைய வலப்பக்கத்தில் நிற்கும் பெரும் சிறப்பு வாய்ந்த பதி. இத்தலம் சிறந்த 'ராகு, கேது க்ஷேத்ரம் ' என்றழைக்கப்படுகிறது.
சிவபெருமான் மீது இலைகள் விழாமல் இருக்க சிலந்தி ஒரு வலை நெய்தது. இதை காற்று மற்றும் நெருப்பு அழித்து விட சிவபெருமான் சிலந்திக்கு முக்தி கொடுத்தார். பாம்பு தனது நாக தேசத்தில் இருந்து கொண்டு வந்த விலையுயர்ந்த ரத்தினங்களைக் காணிக்கையாக செலுத்தி சிவபெருமானை வழிபட்டது. இதனை யானை ஆற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீர் மூலம் சுத்தம் செய்து வழிபாடு செய்தது. இதைப் பார்த்த பாம்பு ஆத்திரமடைந்து தும்பிக்கைக்குள் சென்று யானையை கடித்து கொன்றது. பாம்பை கொல்ல யானை அதன் தலையை பாறையில் மோதி இறந்தது. சிவபெருமான் பாம்பு மற்றும் யானை இரண்டிற்கும் அவர்களின் பக்திக்காக முக்தி கொடுத்தார்.
கண்ணப்ப நாயனார் என்பவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் . திண்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், வேட்டுவர் குலத்தில் பிறந்தவர், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சனை செய்து, பக்குவப்பட்ட பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவகோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணனார் வரும் வேளையில் சிவலிங்கத்தி்ன் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். அதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்பா என மும்முறை கூறி தடுத்தருளினார்.
"கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்" என்று சுந்தரமூர்த்தி நாயானாரும், "நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்" என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர். மேலும் மாணிக்கவாசகர் தனது திருவாசகம்- திருக்கோத்தும்பி பகுதியில் "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மைக் கண்டப்பின் என்னப்பன் என்னையும் ஆட்கொண்டருளி" என்றுக் கூறுகிறார். அதாவது கண்ணப்பரின் அன்புக்கு ஒப்பாக அன்பு காட்ட இயலாத என்னையும் என்னப்பன் ஆட்கொண்டு அருளினார் என்றுஇஅ கூறுகிறார். இவ்வாறு பல்வேறு காலத்தில் பல்வேறு அடியார்கள் கண்ணப்பரின் அன்பினைப் பெரிதும் புகழ்ந்துப் பாடியுள்ளனர்
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடந் தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில் ஏனமின மானினொடு கிள்ளைதினை கொள்ளஎழி லார்க்கவணினாற் கானவர்தம் மாமகளிர் கனகமணி விலகுகா ளத்திமலையே.
- திருஞானசம்பந்தர்
விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண் வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால் மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண் மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப் பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண் பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற கற்றூண்காண் காளத்தி காணப் பட்ட கணநாதன் காணவனென் கண்ணு ளானே.
- திருநாவுக்கரசர்
இமையோர் நாயகனே இறைவாவென் னிடர்த்துணையே கமையார் கருணையினாய் கருமாமுகில் போல்மிடற்றாய் உமையோர் கூறுடையாய் உருவேதிருக் காளத்தியுள் அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
- சுந்தரர்
கருத்துகள்