68. திருக்கண்டியூர்

இறைவன் : பிரமசிரக் கண்டீஸ்வரர், வீரட்டேஸ்வரர், பிரமநாதர், ஆதிவில்வவனநாதர்.

இறைவி : மங்கள நாயகி.





இது சோழநாட்டில் காவேரி நதியின் தென்கரையில் உள்ள 12வது சிவஸ்தலம்  மற்றும் 129வது தேவார பாடல் பெற்ற தலமாகும்.


பிரம்மா தன்னுடைய சிருஷ்டியில் தோற்றுவித்த ஒரு பெண் உருவத்தைப் பார்த்து சந்தோஷப்படுவதை அறிந்த பராசக்தி தான் உண்டாக்கிய பெண்ணை பார்த்து சந்தோஷித்த பிரம்மனுக்கு சிரக்கண்டனம் செய்ய வேண்டுமென ஈஸ்வரனிடம் வேண்ட, அண்ணாமலையாரை  அடிமுடி கண்டேன் எனப் பொய்யுரைத்ததாலும், சிவபெருமான் காலபைரவரைக் கொண்டு ஒரு சிரத்தைக் கொய்தார். பிரம்மா தான்  செய்த தவறுக்கு பிராயச்சித்தம் வேண்ட, ஈஸ்வரன், சரஸ்வதியுடன் தினம் தன்னை பூஜித்துவர சாபம் நீங்கி ஐந்து முக தேஜஸும் நான்கு முகங்களிலேயே தோன்றும் எனக்கூறினார். பிரம்மாவும் தினம் ஈஸ்வரனை வழிபட்டு வரலானார்.  ஒரு சமயம் ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்ய தீர்த்தம் இல்லாமல் போகவே, பிரம்மா ஈஸ்வரனை வேண்ட, நந்திகேஸ்வரன் தனது கொம்பினால் பூமியை கிளற பாதாள கங்கை தோன்றியது. பிரம்மாவும் சிவனை ஆராதனை செய்தார். 


சதாப மகரிஷி தன சிஷ்யர்களுடன் ஈஸ்வரனை தொழுது கொண்டு பிரதோஷ காலத்தில் தன்னுடைய தவ வலிமையால் ஆகாய மார்க்கமாக சென்று திருக்காளத்தீஸ்வரரை தரிசித்து வந்தார். "எப்பொழுதும் இது சாத்தியமா?" என அவரது சிஷ்யர்கள் கேட்க எந்த பிரதோஷ காலத்தில் திருக்காளத்திநாதரை தரிசிக்க இயலாமல் போகிறதோ அப்பொழுது நான் அக்னி பிரவேசம் செய்வேன் என்றார். அவரை சோதிக்க விரும்பிய இறைவன் ஒரு பிரதோஷ நாளில், இடியும், மழையும், புயலையும் தோற்றுவிக்க, சதாப மகரிஷி தனது சபதப்படி தான் உண்டாக்கிய அக்னியை வலம் வந்து அதில் கலக்கும் போது, சிவ சொரூபமான வில்வ விருக்ஷம் அக்னியில் தோன்றியது. இதனைக் கண்ட சதாப முனிவர் இது திருக்கயிலையில்  மட்டும் அல்லவா உள்ளது என அதிசயித்த வேளையில், இறைவன் ரிஷப வாகனத்தில் தோன்றி இரண்டும் வேறு அல்ல ஒன்று தான் எனக் கூறினார். சதாப" முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு 'ஆதிவில்வாரண்யம் ' என்றும் பெயர்.


வினவினேன்அறி யாமையில்லுரை 
  செய்ம்மினீரருள் வேண்டுவீர்
கனைவிலார்புனற் காவிரிக்கரை 
  மேயகண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக் கின்மையோதம 
  ராயினாரண்ட மாளத்தான்
வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ் 
  வையமாப்பலி தேர்ந்ததே.
- திருஞானசம்பந்தர்

 வானவர் தானவர் வைகல் 
  மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்
தானவர் மால்பிர மன்னறி 
  யாத தகைமையினான்
ஆனவ னாதிபு ராணனன் 
  றோடிய பன்றியெய்த
கானவ னைக்கண்டி யூரண்ட 
  வாணர் தொழுகின்றதே.
- திருநாவுக்கரசர்

வீழக் காலனைக் கால்கொடு
  பாய்ந்த விலங்கலான்	
கூழை ஏறுகந் தானிடங்
  கொண்டதுங் கோவலூர்	
தாழையூர் தகட்டூர்
  தக்களூர் தருமபுரம்	
வாழை காய்க் கும்வளர்
  மருகல் நாட்டு மருகலே.
- சுந்தரர்

கருத்துகள்