இறைவன் : பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன்.
இறைவி : அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி.
தேவாரம் பாடப் பெற்ற தளங்களில் இது 105 ஆவது தளம் மற்றும் காவேரி வடகரையில் உள்ள சிவ தலங்களில் 51 ஆவது தலம். அரிசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி மற்றும் காவேரி ஆகிய 5 ஆறுகள் இங்கு பாய்வதால் திருவையாறு எனப் பெயர்பெற்றது. அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம். தென் கைலாயம் என மற்றறொரு பெயரும் இதற்கு உண்டு. சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.
இத்திருக்கோயில் முதன்முதலில் 'பிரிய விரதன்' எனும் சூரிய வம்ச சக்கரவர்த்தியால் திருப்பணி செய்ய பெற்றது. சோழப் பேரரரசன் கரிகாற் பெருவளத்தான் ஐயாற்றை அடைந்தபோது அவன் ஏறி வந்த தேர் பூமியில் அழுந்தி இடம் பெயரவில்லை. இதனடியில் ஏதோ ஒரு சக்தி உள்ளது என்பதை உணர்ந்தான். பூமியை அகழ்ந்த பொழுது அடியில் சிவலிங்கம், சக்தி, ஆதி விநாயகர், முருகன், சப்த மாதர்கள் திருவுருவங்களும் யோகி ஒருவரின் சடைகள் பரந்து விரிந்து வேரூன்றி காணப்பட்டன. மேலும் அகலும் போது, நியமேசர் எனும் அகப்பைச்சித்தர் தவத்திலிருப்பது கண்டு அவரை வணங்கினான். அவரும் அகம் மகிழ்ந்து தேவர்கள் வழிபட்ட இம்மகாலிங்கத்திற்கும், மற்றைய படிமங்கத்திற்கும் கோயில் எடுப்பாயாக எனக்கூறி, எவராலும் வெல்லமுடியாத தண்டம் ஒன்றையும் அளித்து, கோயில் கட்டுவதற்கு வேண்டிய பொருளும் நந்தியின் குழம்படியில் கிடைக்கும் எனக்கூறினார்.
முதலாம் ராஜராஜனின் மனைவி உலகமாதேவியார் வடகைலாயம் எனும் உலகமாதேவீச்சுரத்தை எழுப்பி, உலக வீதி விடங்கர் எனும் சோமாஸ்கந்தர், விநாயகர் முதலான பஞ்ச மூர்த்திகளை வழங்கியுள்ளார்.
முதலாம் ராஜேந்திர சோழன் மனைவி பஞ்சமாதேவி தென் கைலாயம் கோயில் பழுதுபட்டு இருப்பதை அறிந்து அதனை புதுப்பித்தாள்.இத்திருக் கோயிலுள் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், ஒலோகமாதேவீச்சரம் ஆக மூன்று கோயில்கள் உள்ளன.
கலையார் மதியோ டுரநீரும் நிலையார் சடையா ரிடமாகும் மலையா ரமுமா மணிசந்தோ டலையார் புனல்சே ருமையாறே.
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன் இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான் கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை அரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
கருத்துகள்