இறைவன் : ஆபத் சகாயேஸ்வரர்.
இறைவி : பெரிய நாயகி.
தேவாரம் பாடப் பெற்ற தளங்களில் இது 104 ஆவது தளம் மற்றும் காவேரி வடகரையில் உள்ள சிவ தலங்களில் 50 ஆவது தலம். கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு.
அந்தணச் சிறுவன் ஒருவனை எம தருமன் துரத்தி வந்தபோது சிறுவன் இத்தலத்தின் இறைவனிடம் தஞ்சம் புகுந்தான். அதன் பொருட்டு ஆபத்தில் இருந்த சிறுவனை இறைவன் காப்பாற்றியதால் ஆபத் சகாயேஸ்வரர் எனும் பெயர் இறைவனுக்கு வந்ததாக சொல்லப்படுகின்றது.
திருவையாறு சப்தஸ்தானத்தில் இத்தலமும் ஒன்று. சப்தஸ்தான ஸ்தலங்களில் இத்தலம் இரண்டாவதாகும். சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும்.
வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை யெருதேறிப் பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார் நாதாஎனவும் நக்காஎனவும் நம்பா எனநின்று பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.
சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான் முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப் பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ.
உயிரா வணமிருந் துற்று நோக்கி உள்ளக் கிழியி னுரு வெழுதி உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால் உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி அயிரா வணமேறா தானே றேறி அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட அயிரா வணமேயென் னம்மா னேநின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.
கருத்துகள்