73. திருச்சோற்றுத்துறை

 இறைவன் : ஓதனவனேஸ்வரர், தொலையாச் செல்வர், சோற்றுத்துறை நாதர்.

இறைவி : அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை.



தேவாரம் பாடப் பெற்ற தலங்களில்  இது 130 ஆவது  தலம் மற்றும் காவேரி தென் கரையில் உள்ள சிவ தலங்களில் 13 ஆவது தலம்.


அடியார்கள் பசிப்பிணியால் வருந்தியபோது இறைவன் அக்ஷய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவன் இறைவிக்குத் தொலையாச் செல்வர், அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று. இத் தலம் சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று.

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் 
	துப்ப னென்னா தருளே துணையாக 
ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற் 
	றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 
பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து 
	மறையும் ஓதி மயானம் இடமாக 
உறையுஞ் செல்வம் உடையார் காவிரி 
	அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே.
- திருஞானசம்பந்தர்

 பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கி 
    மெய்விரா மனத்த னல்லேன் வேதியா வேத நாவா 
ஐவரால் அலைக்கப் பட்ட ஆக்கைகொண் டயர்த்துப் போனேன் 
	செய்வரால் உகளுஞ் செம்மைத் திருச்சோற்றுத் துறைய னாரே. 
கறையராய்க் கண்ட நெற்றிக் கண்ணராய்ப் பெண்ணோர் பாகம் 
	இறையராய் இனிய ராகித் தனியராய்ப் பனிவெண் டிங்கட் 
பிறையராய்ச் செய்த வெல்லாம் பீடராய்க் கேடில் சோற்றுத் 
	துறையராய்ப் புகுந்தெ னுள்ளச் சோர்வுகண் டருளி னாரே.
- திருநாவுக்கரசர்

அழல்நீர் ஒழுகி அனைய சடையும் 
	உழையீர் உரியும் உடையான் இடமாம் 
கழைநீர் முத்துங் கனகக் குவையும் 
	சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே. 
ஓதக் கடல்நஞ் சினையுண் டிட்ட 
	பேதைப் பெருமான் பேணும் பதியாம் 
சீதப் புனலுண் டெரியைக் காலும் 
	சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே.
- சுந்தரர்

கருத்துகள்