72. திரு ஆலம் பொழில் (திருவாலம்பொழில்)

 இறைவன் : வடமூலநாதர், ஆத்மநாதேஸ்வரர்.

இறைவி : ஞானாம்பிகை.




தேவாரம் பாடப் பெற்ற தலங்களில்  இது 127 ஆவது  தலம் மற்றும் காவேரி தென்கரையில் உள்ள சிவ தலங்களில் 10 ஆவது தலம்.

ஒவ்வொரு சிவ ஆலயமாக வழிபாடு செய்து கொண்டு வந்தார் திருஞானசம்பந்தர். திருவையாறில் வழிபாடு செய்த திருஞானசம்பந்தர், திருப்பூந்துருத்தியில் அப்பர் இருப்பதாக அறிந்தார். அவரைக் காணும் பொருட்டு, பல்லக்கில் ஏறி புறப்பட்டார். வழியில் திருவாலம்பொழில் என்ற இடத்தில் சம்பந்தரின் பல்லக்கில் வந்து கொண்டிருந்தபோது, தன்னைக் காண சம்பந்தர் வருவதாக அப்பர் அறிந்தார். உடனே திருப்பூந்துருத்தி திருத்தலத்தில், தாம் மடம் அமைத்து தங்கியிருந்து செய்துவந்த உழவாரப்பணியை சிறிது நிறுத்திவிட்டு சம்பந்தரை எதிர் கொண்டு அழைக்க வேண்டி விரைந்தார்.

வெகுதொலைவில் சம்பந்தரின் முத்துச் சிவிகை அசைவதும், மணிகளின் ஓசை காற்றினில் கசிந்து வருவதையும் கண்ட அப்பருடன் வந்த பூந்துருத்தி சிவனடியார்கள் சிலிர்த்துப் போனார்கள். இன்னும் விரைவாக நடந்து அருகேயுள்ள வெள்ளாம்பிரம்பூருக்குச் சென்றார்கள். சம்பந்தரும் அவ்வூர் ஈசனை வணங்கிவிட்டு ஊர் எல்லையை அடைந்தார். எதிரே அப்பரடிகளின் அடியார்கள் இரு கைகளையும் சிரசுக்கு மேலே உயர்த்தி சம்பந்தர் பல்லக்கை நோக்கி தொழுதனர். அப்போதுதான் சம்பந்தரும் தமது சிவிகையின் சீலையை உயர்த்தி அடியவர்களை நோக்கி தமது திருமுகம் மலரச் சிரித்தார்.

தன்னை மறந்து சிவிகையை நோக்கி நடந்த அடியவர்கள் கூட்டம், திருநாவுக்கரசரை மறந்தே போனது. அப்பரடிகளும் இதுதான் சமயம் என்று கருதி, அடியார்களுக்குள் சிறியோராய் தம்மை மாற்றிக் கொண்டார்.  சிவிகையை சுமக்கும் ஒருவரின் தோள் தொட்டு மெல்ல விலக்கி சம்பந்தரின் சிவிகையை தமது திருத்தோளில் சுமந்து வரலானார் அப்பர் பெருமான். திருவாலம்பொழில் நெருங்கியதும் ஞானக் குழந்தை சம்பந்தர் சிவிகையின் திரை சீலையை விலக்கி வெளியே எட்டிப்பார்த்து, ‘அப்பர் பெருமான் எங்கு உள்ளார்?’ என்று அங்கு உள்ளோரிடம் கேட்டார்.சிவிகை தூக்கி வரும் தம் சிரசை சற்றே வெளியே நீட்டி அண்ணாந்து சம்பந்தரைப் பார்த்த அப்பர், ‘தேவரீருடைய அடியேனாகிய யான் உம் அடிகள் தாங்கிவரும் பெருவாழ்வு பெற்று இங்குற்றேன்’ என்றார். சம்பந்தர் உடனே சிவிகையிலிருந்து கீழே குதித்து ‘என்ன காரியம் செய்தீர் ஐயா’ என்று அப்பரை வணங்க, அப்பரும் சம்பந்தரை வணங்கி இருவரும் உளமுருகி கட்டித்தழுவினர். அடியவர்கள் கூட்டம் கைகளிரண்டையும் மேலுயர்த்தி ‘இதென்ன திருக்காட்சி’ என வியந்து இவ்விரு அடியார்களையும் பூமியில் வீழ்ந்து வணங்கியது.

இந்த நிகழ்வுக்கு ‘பூந்துருத்தி உபசாரம்’ என்று பெயர். அடியார்களின் இந்த உபசாரத்தால் ஒருகணம் ஆலம்பொழில், கயிலாயபுரியாக மாறியது. அப்பரும், சம்பந்தரும் திருஆலம்பொழில் ஈசனைப் பாடித் துதித்து திருப்பூந்துருத்தியை வந்தடைந்தனர்.

ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் சம்பந்தரின் பல்லக்கினை அப்பர் பெருமான் தமது தோளில் சுமந்து வந்ததையும், பின்னர் ஒருவருக்கொருவர் செய்துகொண்ட உபசாரத்தையும் போற்றி புகழும் வண்ணம் அடியவர்கள் இதனை ‘தோள் கொடுத்த விழா’ என்னும் பெயரில் ஐதீக விழாவாக நடத்திவருகிறார்கள்.

அங்கு அப்பதி நின்று எழுந்தருளி 
	அணிதிரு ஆலம் பொழில் வணங்கிப்
பொங்கு புனல்பொன்னிப் பூந்துருத்திப் 
	பொய்யிலியாரைப் பணிந்து போற்றி
எங்கும் நிகழ்திருத் தொண்டர் குழாம் 
	எதிர்கொள்ள எப்பதியும் தொழுது
செம்கயல் பாய்வயல் ஓடை சூழ்ந்த 
	திருக்கண்டியூர் தொழச் சென்று அணைந்தார்.
- திருஞானசம்பந்தர்

 கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக்
	கமலத்தோன் றலையரிந்த காபா லியை
உருவார்ந்த மலைமகளோர் பாகத் தானை
	உணர்வெலா மானானை ஓசை யாகி
வருவானை வலஞ்சுழியெம் பெருமான் றன்னை
	மறைக்காடும் ஆவடுதண் டுறையு மேய
திருவானைத் தென்பரம்பைக் குடியின் மேய
	திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்