76. திருமழபாடி

 இறைவன் : வயிரத்தூண் நாதர், வஜ்ஜிரஸ்தம்பேஸ்வரர், வைத்யநாதர், மழுவாடீஸ்வரர்.

இறைவி: சுந்தராம்பிகை, அழகம்மை.


தேவாரம் பாடப் பெற்ற தலங்களில்  இது 108 ஆவது  தலம் மற்றும் காவேரி வட கரையில் உள்ள சிவ தலங்களில் 54 ஆவது தலம்.  ஈசன், மார்க்கண்டேய முனிவருக்காக மழுவேந்தி, நடனமாடிய பதியாதலின்,இப் பெயர் பெற்றது. நந்திதேவருக்கு ஊர்மிளா (எ) சுயம்ப்ரகாசை திருமணம் செய்விக்கப் பெற்றத் தலம். பிரமலோகத்திலிருந்தச் சிவலிங்கத்தை, புருஷாமிருக ரிஷி இங்கு எழுந்தருளுவித்தார். இதை மீண்டும் பிரமன், பெயர்க்கமுனைந்தபோது, முடியாமல், பிரமன், இது,"வயிரத் தூணோ" என்று வியந்தமையால், இறைவர் வயிரத் தூண் நாதர் எனப் பெற்றார். 


சுந்தரர் சோழ நாட்டு சிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது திருவாலம்பொழிலில் எழுந்தருளியிருந்தார். அப்போது “சுந்தரா, மழபாடிக்கு வர மறந்தனையோ?” என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர் அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உணர்ந்தார். அருகில் எங்கேயாவது சிவன் கோவில் இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக் கூறினார்கள். திருமழபாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் “தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்” என்னும் கருத்து அமைத்து வஜ்ரஸ்தம்பநாதர் மேல் பதிகம் பாடியருளினார்.





 களையும் வல்வினை யஞ்சல்நெஞ்
  சேகரு தார்புரம்
உளையும் பூசல்செய் தானுயர்
  மால்வரை நல்விலா
வளைய வெஞ்சரம் வாங்கியெய்
  தான்மதுத் தும்பிவண்
டளையுங் கொன்றையந் தார்மழ
  பாடியுள் அண்ணலே.
- திருஞானசம்பந்தர்

 நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
	நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
	கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்
	ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
மாறானார் தம்மரண மட்டான் கண்டாய்
	மழபாடி மன்னும் மணாளன் றானே.
- திருநாவுக்கரசர்

பொன்னார் மேனியனே
  புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
  மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே
  மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால்
  இனியாரை நினைக்கேனே.  
- சுந்தரர்

கருத்துகள்