தொண்டை நாட்டில் உள்ள தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் இது 8 ஆவது பாடல் பெற்ற தலம் ஆகும். ஓத்து - வேதம். இறைவன் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலின் ஓத்தூர் - 'திரு' அடைமொழி சேர்ந்து 'திருஓத்தூர் ' - திருவோத்தூர் என்றாயிற்று.மக்கள் வழக்கில் செய்யாறு, திருவத்திபுரம், திருவத்தூர் என்றெல்லாம் வழங்கப்படுகிறது. கோயில் உள்ள பகுதி திருவத்திபுரம் ஆகும். இறைவன் சுயம்புலிங்கமாக வேதபுரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார்.
இறைவன்: வேதபுரீஸ்வரர், வேதநாதர்.
இறைவி: பாலகுஜாம்பிகை, இளமுலைநாயகி.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது கோயிலைப் பராமரித்துவந்த சிவனடியார் ஒருவர் கோயில் நிலங்களில் பனைவைத்து வளர்த்து வந்தார். அவையாவும் ஆண்பனையாயின. சமணர்கள் பரிகசித்தனர். அதைக்கண்டு சிவனடியார் வருந்திச் சம்பந்தரிடம் விண்ணப்பித்தார். திருஞானசம்பந்தர் ஆண்பனைகளை பெண்பனைகளாக மாறும்படி திருப்பதிகம் பாடி அற்புதம் நிகழ்த்திய தலம் திருவோத்தூர். திருக்கடைக்காப்பில், "குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்" என்று அருளியபோது அவை பெண்பனைகளாயின.
நந்தி சுவாமியை நோக்கியிராமல் முன் கோபுரத்தைப் பார்த்தவண்ணம் உள்ளது. இதுகுறித்து தலப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ள வரலாறு - விசுவாவசு என்னும் மன்னனின் வலிமைக்கு ஆற்றாது தோற்று, ஓடி, காட்டில் திரிந்த தொண்டைமான் வேதபுரீஸ்வரரைத் துதித்து வழங்கினான். இறைவன் காட்சி தந்து, அவனுக்கு அதிக பலத்தையும் சேனைகளையும் அருளி, விசுவாவசுவுடன் போரிட்டு மீண்டும் தன் அரசை எய்துமாறு பணித்தார். கேட்ட மன்னன் 'எங்ஙனம் போரிடுவேன்' என்று அஞ்சியபோது, 'நந்தி உனக்கு படைத் துணையாக வருவார், நீ அதற்கு முன்பாக யாம் கொடுத்த சேனைகளோடு சென்று போரிடுவாயாக' என்றார். மேலும்; "நாம் கூறியதில் உன் மனத்திற்கு சந்தேகமிருப்பின் சாட்சி காட்டுகின்றேன். நீ போய்ப்பார்; அந்த நந்திதேவன் கீழ்த்திசை நோக்கியிருக்கின்றார்." என்றார். அவ்வாறே தொண்டைமான் வந்து பார்க்க, மேற்கு நோக்கியிருந்த நந்திதேவர் கீழ்த்திசையில் திரும்பியிருப்பதைக் கண்டு பயம் நீங்கினான். இறைவன் நந்தியைத் தளபதியாக்கி, சிவகணங்களைக் குதிரைகள் யானைகள் தேர்களைச் சேனைகளாகச் செய்து தந்து, தொண்டடைமானைப் போர்க்கு அனுப்ப, அவனும் அவ்வாறே சென்று, விசுவாவசுவை வென்று நாட்டாட்சியை அடைந்தான்.
மற்றுமொரு வரலாறு - இறைவன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதத்தை ஓதுவிக்கும் போது தக்கவர் தவிர வேறு யாரும் உள்ளே வராமல் தடுக்கவே இவ்வாறு நந்தி திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் உட்பிராகாரத்தில் உயரமான பீடத்தில் அமைந்துள்ள நாகலிங்கத்தை வழிபட்டால் நாகதோஷம் நிவர்த்தியாகும். திருவோத்துரின் தென்திசையிலுள்ள புனதகைகுட்டு என்ற இடத்தில் இருந்து சமணர்கள் ஒரு வேள்வி செய்து ஐந்து தலை உடைய ஒரு நாகத்தை சம்பந்தர் மீது ஏவினார்கள். அச்சமயம் இறைவன் ஒரு பாம்பாட்டியாக வந்து பாம்பின் தலை மீது ஏறி அதை அடக்கி ஞானசம்பந்தருடன் கோவிலுனுள் வந்து லிங்கமாக அமர்ந்தார். அதுவே இங்குள்ள நாகலிங்கம். திருமணம் ஆகாதவர்கள் சனிக்கிழமை ராகு காலத்தில் தீபமேற்றி நாகலிங்கத்தை வழிபட்டால் திருமணம் நிறைவேறும். மேலும் நாகலிங்க சந்நிதிக்கு நேர் ஏதிரே சனி பகவான் உள்ளதால் சகல தோஷங்களும் விலகும்.
பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால் ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக் கூத்தீ ரும்ம குணங்களே.
பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப் பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக் கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக் காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை இருங்கனக மதிலாரூர் மூலட் டானத் தெழுந்தருளி யிருந்தானை இமையோ ரேத்தும் அருந்தவனை அரநெறியி லப்பன் றன்னை அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே.
கருத்துகள்