இது தொண்டைநாட்டின் 29 வது தேவாரம் பாடல் பெற்ற சிவஸ்தலம்.
இறைவர்: பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்டநாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார்.
இறைவியார்: இளங்கிளியம்மை, சுந்தரநாயகி, பாலசுகாம்பிகை, அதிசுந்தரமின்னாள்.
சிவபெருமான் திரிபுராந்தகராக உருவெடுத்தார் என்பது இக்கோயிலின் புராணக்கதை. தாரகன், கமலாட்சன், வித்வான் மாலி ஆகிய மூன்று பேரும் பிரம்மாவை நோக்கி தவம் புரிந்து தங்கள் மூவருக்கும் ஒரே சமயத்தில் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்றும், ஒரே அம்பினால் ஒரே நபரால் கொல்லப்பட வேண்டும் என்றும் வரம் பெற்றனர். வரம் கிடைத்ததும் தேவர்களை சித்திரவதை செய்ய ஆரம்பித்தனர். விஷ்ணு, தேவர்களுடன் சிவபெருமானைச் சந்தித்து ஒரு தீர்வைக் கோரினார். சிவபெருமான் ஒப்புக்கொண்டு பூமியை தேர் ஆகவும், சூரியன் மற்றும் சந்திரன் சக்கரங்கள், நான்கு வேதங்கள் குதிரைகள், மேரு வில், வாசுகி சரம், திருமால் அம்பு, பிரம்மா சாரதி ஆகவும் உடைய தேரில் திரிபுரங்களையும் அசுரர்களையும் அழிக்கப் புறப்பட்டார். தேவர்கள் எல்லாம் தாங்கள் தான் சிவபெருமானைத் தாங்கப் போகிறோம் என்ற செருக்குடன் இருந்தனர். விநாயகரை வழிபடாமல் இருந்ததால், விநாயகர் வழக்கம் போல் சிவ பெருமானின் தேர் அச்சை முறித்து விட்டார். தேவர்கள் தம் பிழையை உணர்ந்தனர். இடர் களையும் படி கணபதியிடம் வேண்ட அவர் திருவருளால் தேர் சீரானது. இதை உணர்ந்த சிவபெருமான் விநாயகருக்கு அருள்பாலித்து திருவதிகைக்கு சென்று மூன்று புரங்களை அழித்தார். திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் (அச்சு + இறு + பாக்கம்) ஆதலின் இப்பெயர் பெற்றது.
முன்பொருமுறை இவ்வூர் வழியே சென்ற பாண்டிய மன்னன் ஒருவன் காட்டு முல்லைக் கொடிகள் சூழ்ந்த காட்டைக் கண்டான். பொன்நிறமான உடும்பு ஒன்று ஓடுவது கண்டு அவன் துரத்திச் செல்ல அது ஓடிச்சென்று சரக்கொன்றை மரத்தின் பொந்தில் புகுந்து கொண்டது. அரசன் ஆணைப்படி ஏவலர்கள் அம்மரத்தை வெட்ட- குருதி வெளிப்பட - சிவலிங்கம் வெளிப்பட்டது. வெட்டிய தழும்புப்பட்ட இறைவனுக்கு, அரசன் "திரிநேத்திரதாரி " என்னும் முனிவரிடம் செல்வத்தைத் தந்து கோயில் கட்டச் செய்தான். அவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோயிலைக் கட்டினார். கோயிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரைக் கேட்க, அவர் அரசே! உம்மை ஆட்கொண்டவர் "உமையாட்சீஸ்வரர் "; எமையாட்கொண்டவர் "ஆட்சீஸ்வரர் " என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது. (உமையாட்சீஸ்வரர் சந்நிதி, வாயிலுக்கு நேரே உள் அடங்கி, பிராகாரத்தில் உள்ளது.
பொன்றிரண் டன்ன புரிசடை புரளப் பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக் குன்றிரண் டன்ன தோளுடை யகலங் குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர் மின்திரண் டன்ன நுண்ணிடை அரிவை மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி அன்றிரண் டுருவம் ஆயஎம் அடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர் கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடி காவும் முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றங் கல்லிற் றிகழ்சீரார் காளத் தியுங் கயிலாய நாதனையே காண லாமே.
கருத்துகள்