84. திருவான்மியூர்

 இது தொண்டைநாட்டின் 25 வது தேவாரம் பாடல் பெற்ற சிவஸ்தலம்.


இறைவர்:   மருந்தீஸ்வரர், ஒளஷதீஸ்வரர், பால்வண்ணநாதர், வேதபுரீஸ்வரர்.  

இறைவியார்: திரிபுரசுந்தரி, சொக்கநாயகி, சுந்தரநாயகி.






வால்மீகி முனிவருக்கு இறைவன் நடனக் காட்சி அருளியத் தலம். வால்மீகி (வான்மீக) முனிவர் பூஜித்தபதி ஆதலின் வான்மியூர் எனப்படுகிறது. மார்க்கண்டேய முனிவர் வான்மீக முனிவரிடம் முக்தி பெற என்ன உபாயம் செய்துள்ளீர் என்று கேட்க அவர் ராமகாதை இயற்றியுள்ளேன் என்று கூறினார். மீண்டும் மார்க்கண்டேயர் அவரிடம் அது சரி முக்திக்கு என்ன உபாயம் செய்துள்ளீர்கள் என்று கேட்க வான்மீக முனிவர் சிவபூஜை முத்தியை தர வல்லது என்பதை உணர்ந்தவராய் இங்கு சிவ பூஜை செய்தார். பங்குனி பௌர்ணமியில் வான்மீகி முனிவர் முத்தி பெற்றதாகச் சொல்லப்படுகிறது. 


ஒருசமயம் காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் அவமரியாதையாக சிவபூஜைக்கு பால் கொடுக்காமல் தாமதம் செய்தது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், "நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய்" என்று சாபமிட்டார். தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு, சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க, "வான்மியூரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா. சாப விமோசனம் கிட்டும்" என்று கூறினார். அதன்படியே செய்து ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது. காமதேனு. பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் இவர் பால்வண்ண நாதர் என்று பெயர் பெற்றார். பசு (காமதேனு) பால் சொரிந்து வழிபட்டமை தொடர்பாகச் சிவலிங்கத் திருமேனியில் சிரசிலும், மார்பிலும் பசுவின் குளம்பு வடு தெரிகின்றது


இறைவன் திருவான்மியூர் தலத்தில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டி அருளினார். அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். அகத்தியருக்கு, (வைத்திய) மூலிகைகளைப் பற்றி இறைவன் உபதேசித்தருளிய சிறப்புத் தலம். இதனால் இறைவனுக்கு ஒளஷதீஸ்வரர் - மருந்தீசர் என்று பெயர். 


கரையு லாங்கட லிற்பொலி
  சங்கம்வெள் ளிப்பிவன்
திரையு லாங்கழி மீனுக
  ளுந்திரு வான்மியூர்
உரையு லாம்பொரு ளாயுல
  காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட
  னாகிய மாண்பதே.
- திருஞானசம்பந்தர் 

விண்ட மாமலர்
  கொண்டு விரைந்துநீர்
அண்ட நாயகன்
  றன்னடி சூழ்மின்கள்
பண்டு நீர்செய்த
  பாவம் பறைந்திடும்
வண்டு சேர்பொழில்
  வான்மியூ ரீசனே.
- திருநாவுக்கரசர்


கருத்துகள்