85. திருவூறல் (தக்கோலம்)

தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 12ஆவது தலம் இது.  நந்திதேவரது வாயினின்றும் நீர் சுரப்பதாலும், இறைவனது திருவடியினின்றும் நீர் சுரப்பதாலும் ஊறல் என்று வழங்குவதாயிற்று.  ப்ருஹஸ்பதியின் தம்பி உததி முனிவர் தன் நோய் நீங்க சிவபெருமானை வழிபட நந்தி தேவர் தன் வாய் வழியாக கங்கையை வெளிப்படுத்தினார். அதில் நீராடி சிவபெருமானை வழிபட்டு முனிவர் நோய் நீங்கப் பெற்றார். ஜலம் சிவபெருமானை சூழ்ந்து சென்றதால் ஜலநாதீஸ்வரர் எனப் பெயர் பெற்றார்.


இறைவன்: ஜலநாதேஸ்வரர், உமாபதீசர். 

இறைவி: கிரிராஜ கன்னிகை, மோகனவல்லி


திருவூறல் என அழைக்கப்பெற்ற இத்தலம் ஆம் நூற்றாண்டில் 'தக்கோலம் ' என்றாயிற்று.  தக்கன் தலையைக் கொய்த தலம் என்பர். தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு ஓலமிட்டதால் 'தக்கன் - ஓலம் ' மருவி 'தக்கோலம் ' என்றாயிற்று.  தமிழக வரலாற்றில் மிகப் புகழ்பெற்ற தக்கோலப்போர் இங்குதான் நடைபெற்றது.  சோழர்களுக்கும், ராஷ்டிரகூடர்களுக்கும் நடைபெற்ற அப்போரில் ராஜாதித்த சோழர் தலைமையில் சோழர்கள் வெற்றி பெற்ற இடம் இது. 








சிவலிங்கம் மணலால் ஆனது. 'தீண்டா திருமேனி'. ஆவுடையாருக்கு மட்டுமே இங்கு அபிஷேகம்.   


மத்த மதக்கரியை மலையான்மகள் அஞ்சவன்று கையால்
மெத்த உரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்
தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலம்நாளுந் நயனம்
ஒத்தல ருங்கழனித் திருவூறலை உள்குதுமே.
- திருஞானசம்பந்தர் 

தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்
	சீர்காழி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல்அம்பர்
	உறையூர் நறையூர் அரணநல்லூர்
விண்ணார் விடையான் விளமர்வெண்ணி
	மீயச்சூர் வீழி மிழலைமிக்க
கண்ணார் நுதலார் கரபுரமுங்
	காபாலி யாரவர்தங் காப்புக்களே. 
- திருநாவுக்கரசர்

கருத்துகள்