86. திருமாகறல்

 தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் 32 -இல் 7 ஆவது தலம். 


இறைவன் :   திருமாகறலீஸ்வரர்.  

இறைவி : திரிபுவனநாயகி, புவனநாயகி. 


இராசேந்திரசோழனுக்கு, இறைவன் பொன் உடும்பாகத் தோன்றி, அவன் துரத்த, புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வெளிப்பட்ட தலம். (மாகறம் - உடும்பு)





முன்னொரு காலத்தில் பிரம்ம தேவர் 'இவ்வுலகெல்லாம் என்னால் படைக்கப்பட்டவை' என்று இறுமாப்புற்றிருந்தார். அகந்தை கொண்ட காரணத்தினால் தனது ஆக்க சக்திகள் அனைத்தையும் இழந்திருந்தார். உலகம் நிலை தவறியது. திருமாலும், தேவர்களும், முனிவர்களும் கயிலை நாதனிடம் முறையிட, சிவ பெருமானும்   வேணுபுரம் என்று வழங்கிய மாகறல் என்னும் இடத்தை அடைந்து தன்னை வழிபாடு செய்யும் படி பிரம்ம தேவனுக்கு அருளினார், பிரம்ம தேவரும் இப்பகுதியை அடைந்து தீர்த்தம் ஏற்படுத்தி நாள்தோறும் நீராடி சிவனை வணங்கி வந்தார். சிவா பெருமானும் பிரம்ம தேவருடைய தவத்தை மெச்சி பழைய நிலையை அடைய அருள் புரிந்தார். பிரம்ம தேவர் தம்முடைய இருப்பிடம் திரும்பும் முன் இத்தலத்தில் ஒரு அதிசய பலா மரத்தை நிறுவினார். அதில் நாள் தோறும் கிடைத்து வந்த 3 பலா கனிகளில் ஒன்று கயிலை நாதருக்கும், மற்றொன்று தில்லைநாதருக்கும், மூன்றாவது உமா மகேஸ்வரருக்கும் நைவேத்தியம் செய்யப்பட்டு வந்தது. தில்லை நாதருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட கனியானது உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் ராஜேந்திர சோழனுக்கு அனுப்பப்பட்டு வந்தது. 


ஒரு நாள் அரசனுக்கு அரசர்க்கு கனி கிடைக்கவில்லை.  அதுபற்றி அறிந்து வர தான் படைகளுடன் மாகறல் அடைந்தான். கனியை தில்லைக்கு எடுத்துச் செல்லும் அந்தணர்கள் அம்மரத்தை அழித்து விட்டனர் என்பதை அறிந்த மன்னன் சினம் கொண்டு அவர்களைத் தண்டிக்க எண்ணினான். ஆனால் கோயிற் பணியாளரைத் தண்டித்தலாகாது என்றெண்ணி, அவர்கள் அனைவரையும் இரவோடு இரவாக ஊரைவிட்டு அழைத்துச்சென்று, மறுநாள் பொழுதுவிடியும் இடத்தில் விட்டுவிடுமாறு உத்திரவிட்டான். மன்னன் ஊர் திரும்பும்போது இத்தல எல்லையில் புதர் மண்டிய ஓரிடத்தில் பென்னிற உடும்பு ஒன்று அரசனின் கண்களுக்குத் தென்பட்டது. அதனைப் பிடிக்க முயலும் போது அவ்வுடும்பு ஓர் புற்றினுள் சென்று மறைந்தது. மன்னன் ஆட்கள் சிலரை அழைத்து புற்றைச் சோதித்துப் பார்க்க உத்தரவிட்டான். ஆட்கள் ஆயதங்களால் புற்றை அகழ்ந்த போது உடும்பின் வாலில் ஆயுதம் பட்டு இரத்தம் பீறிட்டுவர அதைக் கண்ட மன்னன் அதிர்ச்சி அடைந்தான். இறைவன் அப்பொழுது அரசனுக்கு தான் அவ்விடம் இருப்பதை உணர்த்தி அங்கு சிவாலயம் எடுக்குமாறு அசரீரியாக கட்டளையிட்டு அரசனுக்கு அருளினார். இராஜேந்திர சோழ மன்னனும் அவ்வாறே இறைவன் பணித்தபடி திருமாகறல் தலத்தில் இறைவனுக்கு பெரிய சிவாலயம் ஒன்றைக் கட்டி நாள்தோறும் வழிபாடுகள் செய்வித்து இறையருள் பெற்றான்.


விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடலரவம்
மங்குலொடு நீள்கொடிகண் மாடமலி நீடுபொழின் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.
- திருஞானசம்பந்தர் 

கருத்துகள்