88. திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை)

தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 185 ஆவது தலமும், காவிரி தென் கரையில் உள்ள 68 ஆவது தலம் ஆகும். ஞானசம்பந்தர் தம் பதிகத்தில் இப்பகுதியில் சாக்கியர் (பௌத்தர்) வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளதால் 'சாக்கியர் கோட்டை' என்று பெயர் வழங்கி அதுவே பின்பு சாக்கோட்டையாக மாறி வழங்கிற்று என்பர்.


இறைவன் :   அமிர்தகலசநாதர், அமிர்தகலேஸ்வரர்.  

இறைவி : அமிர்தவல்லி







பிரளய காலத்தில் பிரம்ம தேவன், தனது படைப்பு தொழில் மீண்டும் நடை பெற வேண்டி, சிவ பெருமானிடத்து முறையிட, சிவ பெருமான் அதற்கு உலகில் உள்ள அனைத்து புண்ணிய தலங்களில் இருந்தும் மண் எடுத்து வந்து அதில் தேவாமிர்தத்தை கலந்து ஓர் கலசம் செய்து, அதில் அமிர்தத்தால் நிரப்பி, வேத ஆகம, புராண இதிகாசங்கள் மற்றும் அனைத்து ஜீவவித்துக்களையும் ஒன்று சேர்த்து,  அதனை அக்கலசத்தினுள் புகச்செய்து அதன் மீது மாவிலை, தர்பை வைத்து குடத்தின் வாயிலில் தேங்காயை வைத்து மூடி, பூமாலை, பூணூல் சாத்தி, ஆகம முறைப்படி பூஜித்து மேரு மலையில் வைக்குமாறு கூறினார்.  பிரம்ம தேவரும் அவ்வாறே பூஜை செய்து வர, பிரளயத்தின் போது அமிர்த கலசம் இமய மலையில் இருந்து தென் திசை நோக்கி வந்தது. பின்பு ஓர் இடத்தில அக்கலசம் நின்றது.  சிவபெருமான் அச்சமயம் கிராதமூர்த்தி எனும் வேடன் அவதாரமெடுத்து, தன்னுடைய அம்பினால் அமிர்தகலசம் தன்னை உடைத்தார்.   கலசம் மூன்று பாகமாக உடைந்து வாயில் பகுதி குடவாசல் அருள்மிகு கோணேஸ்வரர் திருத்தலமாகவும், கலசத்தில் அடிப்பகுதி இறைவனால் லிங்கமாகப் பெற்று ஆதி கும்பேஸ்வரர் திருத்தலமாகவும், நடுபாகம் திருக்கலயநல்லூர் அமிர்தகலசநாதர் திருத்தலமாகவும் விளங்கி வருகிறது. 


செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி
  செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி
இருள்மேவும் அந்தகன்மேற் றிரிசூலம் பாய்ச்சி
  இந்திரனைத் தோள்முரித்த இறையவனூர் வினவில் 
பெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்
  பிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருகக் 
கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்
  களிவண்டின் கணமிரியுங் கலயநல்லூர் காணே.
- சுந்தரர்

கருத்துகள்