93. திருவீழிமிழலை

காவிரியின் தென்கரையில் உள்ள 178வது தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலம் மற்றும் சோழநாட்டின் 61வது தலமாகும். மூவர் சிவபெருமானைப் புகழ்ந்து பாடல்களைப் பாடியுள்ள 44 பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்றாகும், 


இறைவன் :   நேத்திரார்ப்பணேசுவரர், விழியழகீசர், விழியழகர்.  

இறைவி: சுந்தரகுஜாம்பிகை, அழகுமுலையம்மை.




வீழிச் செடிகள் நிறைந்திருந்தமையால் வீழிமிழலை என்று பெயர் வந்தது.


மகாவிஷ்ணு சிவபெருமானை பூஜித்ததாக திருமாற்பேறு, திருப்பைஞ்ஞீலி, திருவீழிமிழலை ஆகிய சிவஸ்தலங்களின் தல புராண வரலாறுகள் கூறுகின்றன. இம்மூன்று தலங்களில் திருவீழிமிழலை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருமாலுக்கு சலந்திரனைச் சம்ஹரிக்கச் சக்கரம் தேவைப்படுகிறது. அதைப் பெருவதற்காக திருவீழிமிழலையில் சிவபெருமானிடம் வருகிறார். சக்கரம் சிவபெருமானிடம் இருப்பதைக் கேள்விப்பட்ட மகாவிஷ்ணு அதனை பெறவேண்டி இத்தலம் வந்து அம்பிகை பூசித்த இலிங்கத்தை தினந்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் அருச்சித்து வந்தார். சிவபெருமான் அவரது பக்தியைப் பரிசோதிக்க வேண்டி ஒரு நாள் ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்றை மறைத்தருளினார். திருமால் ஆயிரம் பெயர்களால் இறைவனை அருச்சிக்கும் போது ஒரு பெயருக்கு மலர் இல்லாமையால் தனது கண்ணைப் பறித்து இறைவன் திருவடியில் சமர்ப்பித்தார். உடன் சிவபெருமான் மகிழ்ந்து மகாவிஷ்ணுவிற்கு காட்சி கொடுத்து அவர் வேண்டியபடி சக்கரத்தைக் கொடுத்தருளினார்.இங்குள்ள மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள கல்யாண சுந்தரேசுவரர் திருவடியில் திருமால் தம் கண்ணைப் பறித்து அர்ச்சித்த அடையாளமும், கீழே சக்கரமும் இருப்பதை இன்றும் பார்க்கலாம்.


திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் சேர்ந்தே இத்தலத்திற்கு வருகிறார்கள். அவர்கள் வரும்போது நாட்டில் பஞ்சம். மக்கள் உணவின்றித் தவிக்கின்றனர். இந்த நிலையில் அப்பர், சம்பந்தர் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு உணவு அளிப்பது சிரமமாக இருக்கிறது. இருவரும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடுகிறார்கள். மறுநாள் காலையில் கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருப்பதை இருவரும் காண்கிறார்கள். அவற்றைக் கொண்டு அடியவர்களுக்கு உணவு அளிக்கின்றனர். நாட்டில் பஞ்சம் தீரும் வரையில் இவ்வாறு தினமும் படிக்காசு பெற்று தொண்டு செய்திருக்கின்றனர். படிக்காசு அளிப்பதிலும் இறைவன் அப்பருக்கு நல்ல காசும், சம்பந்தருக்கு மாற்றுக் குறைந்த காசும் கொடுத்தார். சம்பந்தர் அதைப் பார்த்து "வாசி தீரவே காசு நல்குவீர்…” என்னும் பதிகம் பாடிய பிறகு அவருக்கும் நல்ல காசு கொடுத்து அருள் செய்தார். அவ்வாறு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் உள்ளன. 


வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.  

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.  

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.  

நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.  

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாமம் மிழலையீர், சேமம் நல்குமே.  

பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.  

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.  

அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.  

அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.  

பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே.  

காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.
- திருஞானசம்பந்தர்

ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூக்கொண்டு
ஆறு உடைச் சடையினானை அர்ச்சித்தான் அடி இணைக்கீழ்
வேறும் ஓர் பூக் குறைய மெய்ம் மலர்க்கண்ணை யீண்டக்
கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கை வீ ரட்டனாரே. 
- திருநாவுக்கரசர்

நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்	
  நான்மறைக்கிட மாயவேள்வியுள்	
செம்பொ னேர்மட வாரணி	
  பெற்ற திருமிழலை	
உம்ப ரார்தொழு தேத்த மாமலை	
  யாளடும் முடனே உறைவிடம்	
அம்பொன் வீழிகொண் டீர்அடி	
  யேற்கும் அருளுதிரே.  
- சுந்தரர்

கருத்துகள்