காவிரியின் தென்கரையில் உள்ள 153வது தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலம் மற்றும் சோழநாட்டின் 36வது தலமாகும்.
இறைவன் : மாசிலாமணி ஈஸ்வரர், கோமுத்தீஸ்வரர் (மூலவர்), அணைத்தெழுந்தநாயகர், கோகழிநாதர், பூகயிலேசுவரர். புத்திரத்தியாகர். மகாதாண்டவேசுரர், போதிவன நாதர், சிவலோக நாயகர், போதியம் பலவாணர், அர்த்தத்தியாகர், முத்தித்தியாகர், திருவாவடுதுறை உடையார், பரமசாமி திருவாவடுதுறை ஆழ்வார்
இறைவி: ஒப்பிலா முலையம்மை, அதுல்ய குசாம்பிகை
அம்பிகை, பசு வடிவத்தில் இறைவனை வழிபட்ட தலம். எனவே, ஆவடுதுறையாயிற்று(ஆ-பசு)
சுந்தரநாதர் எனும் சிவயோகியார் கயிலாயத்திலிருந்து பூலோகம் வந்து சிவத்தலங்களை தரிசித்து வந்தார். அவர் இத்தலம் வந்தபோது, மூலன் எனும் இடையன் இறந்து கிடக்க, அவனைச் சுற்றிலும் பசுக்கள் அழுது கொண்டிருந்ததைக் கண்டார். பசுக்களின் மீது பரிவு காட்டிய அவர் தன் உயிரை மூலன் உடலில் புகுத்தி எழுந்தார். பின் பசுக்களை வீட்டில் விட்டுவிட்டு இத்தலத்தில் தவம் செய்யத் துவங்கினார். மூலன் வீட்டிற்கு திரும்பாததால், அவனது மனைவி இங்கு வந்து சுந்தரநாதரை தன்னுடன் வரும்படி அழைத்தார். அவர் செல்ல மறுத்தார். மூலன் சிவஞானம் பெற்றதாக உறவினர்கள் கூறவே மனைவியும் விட்டுச் சென்றுவிட்டாள். இவரே திருமூலர் என்று பெயர் பெற்றார். இவர் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம், மொத்தம் 3 ஆயிரம் பாடல்களை பாடினார். இவையே திருமூலர் திருமந்திரமாக தொகுக்கப்பட்டது. இத்தலத்தின் வெளிப் பிரகாரத்தில் திருமூலருக்கு சன்னதி இருக்கிறது.
திருஞானசம்பந்தர், இத்தலத்தில் தன் தந்தையார் சிவபாத இருதயருடன் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது சீர்காழியில் யாகம் நடத்த வேண்டுமென சிவபாத இருதயர் விரும்பினார். எனவே யாகத்திற்கு வேண்டிய பொன்னும், பொருளும் வேண்டுமென சம்பந்தரிடம் கேட்டார். சம்பந்தர் யாகத்திற்கு பொருள் வேண்டி ‘இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்…’ என்று தொடங்கும் பதிகம் பாடினார். சிவன் பூதகணங்கள் மூலமாக, எடுக்கக் குறையாத ஆயிரம் பொன் கொண்ட ஒரு பொற்கிழியை கொடுத்து அதனை இக்கோயிலில் உள்ள பலிபீடத்தின் அகன்ற பீடத்தில் வைக்கச் செய்தார். பொன் பெற்ற சிவபாத இருதயர் சீர்காழிக்கு சென்று யாகத்தை நடத்தி முடித்தார். திருஞானசம்பந்தர் இப்பீடத்தின் அருகில் தமிழ்மணம் கமழ்வதை அறிந்து பீடத்தின் கற்களை பெயர்க்க அதன் அடியில் இருந்து திருமூலர் பாடிய திருமந்திரம் வெளிப்பட்டது.
இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமாறீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே.
மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலுங் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே.
மறைய வனொரு மாணிவந் தடைய வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக் கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த காரணங் கண்டுகண் டடியேன் இறைவன் எம்பெரு மானென்றெப் போதும் ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன் அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
கருத்துகள்