94. திருக்கச்சூர் ஆலக்கோவில்

தொண்டை நாட்டில் உள்ள 28வது தேவாரப்பாடல் பெற்ற சிவதலம், திருக்கச்சூர் தலம் ஆலக்கோவில் என்ற பெயருடனும் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் மூலவர் கச்சபேஸ்வரர். 


இறைவன் :   கச்சபேஸ்வரர் , தியாகராஜர், விருந்திட்டஈஸ்வரர், விருந்திட்டவரதர்

இறைவி: அஞ்சனாட்சி அம்பாள், இருள் நீக்கியார்.





அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலைக் கடையும்  பொழுது, மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது. அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார். திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது. இத்தலம் ஆதிகச்சபேஸம் என்று அழைக்கப்படுகிறது.


சிவபெருமான் சுந்தரருக்காக தனது கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து சுந்தரரின் பசியைப் போக்கிய தலம் என்ற பெருமையும் திருக்கச்சூருக்கு உண்டு. இத்தலத்திற்கு வந்த சுந்தரர் ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டார். வெகு தொலைவில் இருந்து திருக்கச்சூர் வந்த காரணத்தினால் களைப்பும் அதனுடன் பசியும் சேர்ந்து தள்ளாடியபடி கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் படுத்து கண்களை மூடுகிறார். சுந்தரரின் நிலையைக் கண்ட இறைவன் கச்சபேஸ்வரர் ஓர் அந்தணர் உருவில் வந்து, சுந்தரை அங்கேயே இருக்கச் செய்து; இவ்வூரிலுள்ள அடியார்கள் வீடுதோறும் சென்று, உணவு பெற்று வந்து, சுந்தரருக்கு இட்டு, அவர் பசியை போக்கினார்.


இந்திரன் ஒரு சாபத்தினால் நோய் உண்டாகி அவதிப்பட்டான். தேவலோக மருத்துவர்கள் ஆன அஸ்வினி தேவர்கள் நோயை குணப்படுத்தும் மூலிகை தேடி தேவர்கள் பூலோகம் வந்தனர். பல இடங்களில் தேடியும் மருந்து கிடைக்கவில்லை. அவர்கள் நாரதரிடம் ஆலோசனை கேட்க அவர் மருந்துமலை எனும் மலையில் குடி கொண்டிருக்கும் சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டு வந்தால் அவர்கள் அருளால் மருந்து கிடைக்கும் என்று கூறினார். அதன்படி இங்கு வந்த அஸ்வினி தேவர்கள் சுவாமியை வழிபட்டனர். அவர்களுக்கு சிவபெருமான் பாலை, அதிபாலை என்ற இரண்டு மூலிகைகளைக் காட்டி அருள் புரிந்தார். நோய் தீர்க்க மருந்து கொடுத்ததால்  இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

    முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானே
    மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான்  மகள்தன் மணவாளா
    கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே
    அதுவே ஆமா றிதுவோ கச்சூர் ஆலக் கோயில் அம்மானே

    மேலை விதியே வினையின் பயனே விரவார் புரமூன் றெரிசெய்தாய்
    காலை யெழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா
    மாலை மதியே மலைமேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
    ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.  
- சுந்தரர்

கருத்துகள்