நடு நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் 5ஆவது சிவ ஆலயமும், தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 37ஆவது தலம் ஆகும்.
இறைவன் : சிவக்கொழுந்தீசர், சிவாகங்கரேஸ்வரர், திருந்தீஸ்வரர்.
இறைவி: நீலாயதாக்ஷி, ஒப்பிலாநாயகி, கருந்தடங்கண்ணி, இளங்கொம்பன்னாள்.
முன்னொரு காலத்தில் பெரியான் என்னும் பள்ளனும் அவன் மனைவியும் சிவபெருமான் மீது அதிக பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒரு சிவபக்தருக்கு உணவளித்து விட்டு அதன் பின்பு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு சமயம் சிவபெருமான் அவர்களது பக்தியை உலகுக்குக் காட்ட எண்ணி, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றான். ஆனால் அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் நீண்ட நேரம் அங்கேயே காத்திருந்தனர். அப்போது இறைவன் அடியவராக வந்து அன்னம் கேட்க, விவசாயி வீட்டிற்குச் சென்று உணவு எடுத்து வருவதாகக் கூறினான். அடியவராக வந்து இறைவன் அவனிடம் "நான் உழைக்காமல் எதுவும் சாப்பிட மாட்டேன். எனவே, உன் தோட்டத்தில் எனக்கு ஏதாவது வேலை கொடு! அதற்கு கூலியாக வேண்டுமானால் சாப்பிடுகிறேன்" என்றார். விவசாயியும் ஒத்துக்கொண்டு, தன் தோட்டத்தை உழும்படி கூறினான். இறைவன் வயலில் இறங்கி உழுதார். தம்பதியர் இருவரும் வீட்டிற்கு சென்று, உணவை எடுத்துக்கொண்டு திரும்பினர். அப்போது, தோட்டத்தில் அன்று விதைக்கப்பட்டிருந்த தினைப் பயிர்கள் அனைத்தும் நன்கு விளைந்து, கதிர்கள் முற்றி, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. ஆச்சர்யமடைந்த விவசாயி சந்தேகத்துடனே அடியவருக்கு அருகிலிருந்த கொன்றை மரத்தின் அடியில் அன்னமிட்டான். அடியவர் சாப்பிட்ட பின்பு, அவரிடம் ஒரே நாளில் திணைப்பயிர் விளைந்தது எப்படி? எனத் தன் சந்தேகத்தைக் கேட்டான். அடியவராக வந்த முதியவர் மறைந்து, சிவபெருமானாக அவனுக்குக் காட்சி தந்து, தானே அடியவராக வந்ததை உணர்த்தினார். சிவதரிசனம் கண்டு மகிழ்ந்த விவசாயி இறைவனை அங்கேயே எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டான். இறைவனும் சுயம்பு லிங்கமாக அவ்விடத்தில் எழுந்தருளினார். அதிசயமாக ஒரே நாளில் தினை விளைந்ததால் இத்தலம் தினைநகர் என்று பெயர் பெற்றது. சிவபெருமான் உணவு சாப்பிட்ட கொன்றை பிரகாரத்தில் உள்ளது.
நீறு தாங்கிய திருநுத லானை நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை கூறு தாங்கிய கொள்கையி னானைக் குற்றம் இல்லியைக் கற்றையஞ் சடைமேல் ஆறு தாங்கிய அழகனை அமரர்க் கரிய சோதியை வரிவரால் உகளுஞ் சேறு தாங்கிய திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
கருத்துகள்