நடு நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் 18ஆவது சிவ ஆலயமும், தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 50ஆவது தலம் ஆகும்.
இறைவன் : பாடலீஸ்வரர், பாடலேஸ்வரர், தோன்றாத்துணை நாதர்.
இறைவி: பெரியநாயகி, தோகைநாயகி, அருந்தவநாயகி.
மத்யந்தின முனிவரின் மகன் சிவபெருமானின் வழிபாட்டிற்காக வண்டுகள் வருவதன் முன் அதிகாலையில் பூப்பறிக்க, புலியின் கண்களும் பாதங்களும் பெற்றுப் புலிக்கால் முனிவரான (வியாக்ரபாதர்) தலம். புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்) தவம் செய்து பேறு பெற்ற இத்தலம் இதுவாகும். இதன் காரணமாகவே பாதிரி மரத்தை தலவிருட்சமாக உள்ள இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது
திருநாவுக்கரசரை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) சமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பர் சுவாமிகள் கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே என நமசிவாயப் பதிகம் பாடித் துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயப்பட்டு அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் "கரையேறவிட்ட குப்பம்" என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.
ஒரு முறை கைலாயத்தில் பரமனும், பார்வதியும் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் தோல்வி பெருமானுக்கே. ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறிய பெருமானின் திருக்கண்களை பார்வதி தன் திருக்கரங்களால் மூடினாள். இதனால் உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. இதனைக் கண்ட இறைவி தன் செயலால் ஏற்பட்ட இன்னல்கள் கண்டு மனம் வருந்தி தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு இறைவன் சிவபெருமான் இறைவியை பூலோகம் சென்று அங்குள்ள சிவ தலங்களை பூசிக்கும்படியும் அவ்வாறு பூசிக்கும் போது எந்த தலத்தில் இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அந்தத் தலத்தில் ஆட்கொள்வதாக கூறினார். அதுபோல் இறைவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு பாதிரி வனமாகத் திகழ்ந்த இத்தலத்திற்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் இத்தலத்திலேயே தங்கி அரூபமாக (உருவமில்லாமல்) இறைவனை பூசித்து பேறு பெற்றாள்.
முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள் புன்னைநின்று கமழ்பா திரிப்புலி யூருளான் தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள் பின்னைநின்ற பிணியாக் கையைப்பெறு வார்களே.
ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய் மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த் தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.
கருத்துகள்