99. திருமறைக்காடு (வேதாரண்யம்)

இது 242வது தேவாரம் பாடல் பெற்ற சிவஸ்தலம் மற்றும் சோழநாட்டில் காவேரி நதியின் தென்கரையில் உள்ள 125வது தலமாகும்.

இறைவன்: வேதாரண்யேஸ்வரர், மறைக்காட்டு மணாளர். 

இறைவி: யாழைப்பழித்த மொழியாள்

தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் என்ற பெருமையை உடைய வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம். விடங்கரின் பெயர் புவனி விடங்கர். நடனம் ஹம்ச பாத நடனம். இத்தலத்து மூலவர் மறைக்காடுநாதர் ஒரு சுயம்பு லிங்கமாக அருள் புரிந்து வருகிறார். 





இராமர் இவ்விடத்தில் சமுத்திர ஸ்னானம் செய்து இராவணனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றார் என்று தலப்புராணம் கூறுகிறது. இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தை விட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் அவ்வாறு பெயர் கொண்டுள்ளாள். இதனால் தான் இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன் கைகளில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் காட்சி அளிக்கிறாள். அகத்தியான்பள்ளியில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன் திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளி உள்ளார். அகத்தியான்பள்ளியைப் போன்றே கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் பார்வதி கல்யாண கோலம் அமைந்திருக்கிறது.

ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது. நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து கோண்டு இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன. கலியுகம் ஆரம்பிப்பதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்றுணர்ந்த வேதங்கள் கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலினுள்ளே சென்று வந்தனர்.

ஒருமுறை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டிற்கு வருகை புரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விபரம் கேட்டனர். வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளை திறக்கச் செய்ய பாடல் பாடும் படி திருஞான சம்பந்தர் நாவுக்கரசரை வேண்ட அவரும் பாடல்கள் பாட கதவு திறந்தது. இறைவனை தரிசித்து விட்டு திரும்பும் பொழுது நாவுக்கரசர் கோவிலின் கதவுகளை பழையபடியே மூடச் செய்ய பதிகம் பாடும் படி ஞானசம்பந்தரை வேண்ட அவரும் ஒற்றை பாடல் பாடவே கதவு மூடியது. 

இத்தலத்தில் தான் திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடியருளினார். பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி பாண்டிய நாடு வரவேண்டும் என்று சம்பந்தருக்கு அழைப்பு விட்டார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் கூறிவிட்டுப் போக வந்தார். மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும் தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்று சொல்லி சம்பந்தர் மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார். அதற்கு சம்பந்தர் சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும் இடர் செய்யாது என்று கூறி பதிகம் பாடினார். இப்பதிகம் "கோளறு திருப்பதிகம்" என்று போற்றப்படுகிறது.

சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி அரவது கொடுதிவி    
    தலமலி சுரரசு ரர்களொலி சலசல கடல்கடை வுழிமிகு    
    கொலைமலி விடமெழ அவருடல் குலைதர வதுநுகர் பவனெழில்    
    மலைமலி மதில்புடை தழுவிய மறைவனம் அமர்தரு பரமனே.
- திருஞானசம்பந்தர்

இந்திர னோடு தேவர் 
  இருடிகள் ஏத்து கின்ற
சுந்தர மானார் போலுந் 
  துதிக்கலாஞ் சோதி போலுஞ்
சந்திர னோடுங் கங்கை 
  அரவையுஞ் சடையுள் வைத்து
மந்திர மானார் போலும் 
  மாமறைக் காட னாரே. 
- திருநாவுக்கரசர்

யாழைப்பழித் தன்னமொழி
  மங்கையொரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை
  வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழி லூடேசென்று
  பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்
  குண்ணும்மறைக் காடே.
- சுந்தரர்

கருத்துகள்