102. திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்)

தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 44 ஆவது தலமும், நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 12 ஆவது தலம் ஆகும்.  இது தென்பெண்ணை ஆற்றங்கரையினில் உள்ளது. 





இறைவன்: அறையணிநாதேசுவரர், அதுல்யநாதேசுவரர், ஒப்பிலாமணி. 

இறைவி: அருள்நாயகி, அழகிய பொன்னம்மை. 

பாண்டவர் வனவாச காலத்தில் பாறையில் ஐந்து அறைகளை கொண்ட குடைவரை குகைகள் இங்கு உள்ளது. கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில் உள்ளது 'வீமன் குளம்'. இது வீமன், கதையால் உண்டாக்கப்பட்டதாகக் கூறுவர். 

இக்கோயில் வெளிப்பிராகாரத்தில் உள்ள நடன மண்டபம் நீண்ட காலமாகக் கட்டப் பெற்றும் முடியப்பெறாமல் பல முறை இடிந்து விழுந்தது. இக்கோயில் தேவரடியாள் பொன்னாண்டையின் மகன் இளவெண்மதி சூடினான் என்பவன், இம்மண்டப வேலை பூர்த்தியானால், தன் உயிரை மாய்த்துக்கொள்வதாகச் சொல்லி அம்மண்டப வேலை முடிவு பெற்றதும், தன் உயிரை மாய்த்துக் கொண்டான். அவனுடைய வீரச் செயலைப் பாராட்டி அவன் சந்ததியார்க்கு ஆயிரங்குழி நிலம் உதிரப் பட்டியாகக் கோயிலாரால் கொடுக்கப்பெற்றுள்ளது. இச்செய்தி மாறவர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி, சுந்தரபாண்டியதேவனது பத்தாம் ஆண்டுக் கல்வெட்டால் விளங்குகின்றது. இளவெண்மதி சூடினான் தன் தலையை வெட்டிக்கொள்வதுபோல் உருவம் ஒன்று செதுக்கப் பெற்றுக் கோயிலுக்கருகில் தெருவில் வைக்கப் பெற்றிருக்கிறது.

பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா
வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி
சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்
ஆடினார் அறையணி நல்லூர் அங்கையால்தொழுவார்களே. 
- திருஞானசம்பந்தர்
செல்வப் புனற்கெடில வீரட்டமுஞ் 
	சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமுந்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலுந்
	தென்னானைக் காவுஞ் சிராப்பள்ளியும்
நல்லூருந் தேவன் குடிமருகலும்
	நல்லவர்கள் தொழுதேத்து நாரையூருங்
கல்லலகு நெடும்புருவக் கபாலமேந்திக் 
	கட்டங்கத் தோடுறைவார் காப்புக்களே. 
- திருநாவுக்கரசர்

கருத்துகள்