தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 51 ஆவது தலமும், நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 19 ஆவது தலம் ஆகும்.
இறைவன்: சிவலோகநாதர், முண்டீஸ்வரர், முண்டீசர்.
இறைவி: சௌந்தர்யநாயகி, கானார்குழலி, செல்வநாயகி, செல்வாம்பிகை.
துவாபர யுகத்தில் சொக்கலிங்க மன்னன் என்பவன் வேட்டைக்கு வந்தபோது குளத்தில் ஒரு அதிசயமான தாமரை மலரைக் கண்டான்; ஆள் அனுப்பி, அம்மலரை பறித்து வருமாறு கட்டளையிட்டான். அவனும் சென்று பறிக்கையில் அம்மலர் அவன் கைக்கு அகப்படாமல் சுற்றி வரலாயிற்று. அதுகண்ட மன்னன், அதன்மீது அம்பெய்ய, குளம் முழுவதும் செந்நிறமாயிற்று. அது கண்ட மன்னன் மயங்கி அதனருகே சென்று பார்த்தபோது அம்மலரில் இலிங்கமிருப்பதைக் கண்டான்; அதை எடுத்து அக்குளக்கரையில் ஆலயம் எடுப்பித்துப் பிரதிஷ்டை செய்தான் என்று வரலாறு சொல்லப்படுகிறது. மன்னன் அம்பு எய்திய காரணத்தால் இன்றும் சுவாமி மீது அம்புபட்ட தழும்புள்ளது. இதனால் சுவாமிக்கு 'முடீஸ்வரர் ' என்றும் பெயர் வந்தது.
ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப் போர்த்தான்காண் புரிசடைமேற் புனலேற் றான்காண் புறங்காட்டி லாடல் புரிந்தான் றான்காண் காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங் கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய சிவலோகன் காணவனென் சிந்தை யானே.
கருத்துகள்