தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 137 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென் கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 20 ஆவது தலம் ஆகும்.
இறைவன்: பஞ்சவர்ணேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர், பெரியாண்டேஸ்வரர்.
இறைவி: கல்யாணசுந்தரி, கிரிசுந்தரி, பர்வதசுந்தரி.
இவ்வாலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய ஒரு மாடக்கோவிலாகும். 63 நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனார் தனது மனைவி மற்றும் மகனுடன் சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு முக்தி பெற்ற தலம் திருநல்லூர். இத்தலத்தில் அமர்நீதி நாயனார், அவர் மனைவி, மகன், அருகில் அந்தணர் உருவில் இறைவன் ஆகியோர் உருவச் சிலைகள் இருப்பதைக் காணலாம்.
ஒருசமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் ஒன்றை திருநல்லூரிலும், மற்றொன்றை அருகிலுள்ள ஆவூரிலும் விடுவித்தார். நல்லூரில் விழுந்த அம்மலைச் சிகரமே இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எழுந்தருளியுள்ள மலையாகும். தென் கயிலாயம் என்று இத்தலமும் வழங்கப்படுகின்றது.
அகத்தியர் சிவனின் திருமணக்கோலம் கண்ட பல தலங்களில் திருநல்லூர் தலமும் ஒன்றாகும்.
இங்குள்ள மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி ஒரு நாளில் பகல் ஒன்றில் 6 நாழிகைக்கு ஒரு முறை ஐந்து தடவை நிறம் மாறுகிறார். முதலில் தாமிர நிறம், அடுத்து இளம் சிவப்பு, அடுத்து உருக்கிய தங்க நிறம், இதையடுத்து நவரத்தின பச்சை, பிறகு இன்ன நிறமென்றே கூற முடியாத ஒரு தோற்றத்தில் காட்சி தருகிறார். எனவே தான் மூலவருக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று திருநாமம். இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக சதுர ஆவுடையாருடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார் . பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை வழிபட்டதால் லிங்கத்தில் துளைகள் இருப்பதைக் காணலாம். சிவலிங்கத்தின் பின்னால், அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய கல்யாண சுந்தரர் உருவம் சுதை வடிவில் காட்சியளிக்கின்றது. இருபக்கத்திலும் திருமாலும், பிரம்மாவும் காட்சி தர, அகத்தியர் வழிபடும் நிலையில் நிற்கின்றார். மூலவருக்குப் பக்கத்தில் ஒரு சிறிய லிஙம் அமைக்கப்பட்டுள்ளது. இது அகத்திய லிங்கம் எனப்படுகிறது. ஒரே ஆவுடையார் மீது இரண்டு பாணங்கள் இருப்புது ஒரு சிறப்பம்சம்.
முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடமிருந்து தியாகராஜரைப் பெற்று திருவாரூர் செல்லும் போது, இத்தலத்தில் 3 நாள் இருந்து தியாகராஜரை வைத்து பூஜை செய்துள்ளார் என்ற பெருமையை உடையது. திருநாவுக்கரசர் திருச்சத்திமுற்றத்தில் இறைவன் தன்னுடைய திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்து அருளவேண்டும் என்று இறைவனிடம் பதிகம் பாடி வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோளை திருநல்லூர் தலத்தில் இறைவன் நிறைவேற்றுகிறார். தம் திருவடிகளை அப்பரின் தலைமீது இத்தலத்தில் சூட்டி அருளினார். அப்பேறு பெற்ற திருநாவுக்கரசர் இறைவனை பதிகம் பாடி தொழுதார். இதன் காரணமாக பெருமாள் கோயிலில் சடாரி சாத்தும் வழக்கம் போன்று இத்தலத்தில் சிவன் பாதம் பொறித்த சடாரியை பக்தர்களுக்கு வைக்கும் பழக்கம் ஏற்பட்டது. பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் இறைவன் தன் திருவடியை சூட்டி அருளியதை குறிப்பிட்டுப் பாடுகிறார்.
அலைமல்கு தண்புனலும் பிறையஞ்சூடி அங்கையில் கொலைமல்கு வெண்மழுவும் அனலும் ஏந்துங்கொள்கையீர் சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர் மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்துவானோர் இனந்துருவி மணிமகுடத்தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப்பில்கி நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே.
கருத்துகள்