தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 138 ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென் கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 21 ஆவது தலம் ஆகும்.
இறைவன்: பசுபதீஸ்வரர்.
இறைவி: மங்களாம்பிகை, பங்கஜவல்லி.
வசிஷ்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரம்மாவின் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்ற தலம். ஆ (பசு) வழிபட்டதால் இத்தலம் ஆவூர் என்று பெயர் பெற்றது.
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் ஆவூர் பசுபதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். ஒருசமயம் ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் தமக்குள் யார் வலியவர் என்பதில் போட்டி எழுந்தது. ஆதிசேடன் கயிலையைத் தன் ஆயிரம் மகுடங்களாலும் இறுகப்பற்றிக் கொள்ள, வாயுதேவன் சண்டமாருதமாக மலையை அசைக்க முற்பட்டு பலத்த காற்றை வீசினார். இந்த இருவரின் போட்டியால் தேவர்கள் அஞ்சினர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி ஆதிசேடன் தன்பிடியைச் சிறிது தளர்த்தினார். இது தான் தக்க சமயமென்றெண்ணி வாயு இரு சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில் ஒன்றை ஆவூரிலும், மற்றொன்றை அருகிலுள்ள திருநல்லூரிலும் விடுவித்தான் என்று தலபுராணம் தெரிவிக்கிறது.
புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார் திங்கள் கண்ணியர் என்றென்று காதலாளர் கைதொழுது ஏத்த இருந்த ஊராம் விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகழல் சோலை சுலாவி எங்கும் பண்ணியல் பாடல்அ றாத ஆவூர்ப் பசுபதி ஈச்சரம் பாடுநாவே.
- திருஞானசம்பந்தர்
கருத்துகள்