இறைவன்: நாவலீஸ்வரர், பக்த ஜனேஸ்வரர், ஜம்பு நாதேஸ்வரர்
இறைவி: மனோன்மணி, சுந்தரநாயகி, நாவலாம்பிகை.
தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 40 ஆவது தலமும், நடுநாட்டில் உள்ள சோழ நாடு காவிரி தென் கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 8 ஆவது தலம் ஆகும். 63 நாயன்மார்களில் ஒருவருமான சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்த தலம் இது. திருநாவலூர் பழைய திருமுனைப்பாடி நாட்டில் கெடிலம் மற்றும் பெண்ணை ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பழமையானதாகவும், 4 யுகங்களுக்கு முன்பே இங்கு இருந்ததாக கூறப்படுகிறது. கிருத யுகத்தில் விஷ்ணுவும், துவாபர யுகத்தில் பிரம்மாவும், திரேதாயுகத்தில் சிவப்பிரியர் என்பவர் சிவபூஜை செய்து சண்டிகேஸ்வர பட்டம் பெற்றார்.
கருவறையின் சுவரில் சண்டேசுரனின் வரலாறு உள்ளது சிற்பங்கள் வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சண்டேசுரன் பசுவிடம் பால் கறக்கும் காட்சிகள், அவனது தந்தை மரத்தில் ஏறும் காட்சிகள், சண்டேசுரன் திருமஞ்சனம் செய்வது, தந்தையின் பாதங்களை வெட்டி சிவனின் அருளை பெறுவது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இக்கோயில் முன்பு "திருத்தொண்டீச்சரம்" என்றும், இதனைச் சுற்றியுள்ள இடம் திருநாவலூர் என்றும் ஜம்புநாதபுரி என்றும் அழைக்கப்பட்டது. ஆனால், தற்போது திருநாமநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.இரண்யனை அழிக்க மகாவிஷ்ணு திருநாவலூர் தலத்து இறைவனான பக்தஜனேஸ்வரரை வழிபட்டார். நரசிம்ம அவதாரம் எடுத்து, தூணில் இருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்ய வேண்டிய ஆற்றலை திருமாலுக்கு வழங்கிய தலம் தான் திருநாவலூர். இக்கோயிலில் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு (மகாவிஷ்ணு) தனி சன்னதி உள்ளது.
சுக்ரபகவான் இத்தலத்தில் இறைவனை வணங்கி பூஜித்து வக்ர தோஷம் நிவர்த்தி பெற்றார். சுக்கிரன் காசியில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பலகாலம் பூஜித்தார். இவரது பூஜைக்கு மகிழ்ந்த சிவபெருமான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். இதை அறிந்த அசுரர்கள் சுக்கிரனைத் தங்கள் குல குருவாக ஏற்றுக் கொண்டார்கள். தேவாசுரப்போரில் இறந்த அசுரர்களை எல்லாம் சுக்கிரன் தன் சஞ்சீவினி மந்திரத்தால் உயிர்க்கச் செய்தார். தேவர்கள் அசுரர்களுக்கு நியதிக்கு மாறாக அழிவில்லாமல் போகவே சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமான் சுக்கிரனை விழுங்கினார். சிவபெருமான் வயிற்றில் பல காலம் சுக்கிரன் யோகத்தில் இருந்தார் சிவபெருமான் அவருடைய வழிபாட்டிற்கு மெச்சி நவக்கிரக பதவி கொடுத்து அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப செல்வத்தை வழங்கி வர உத்தரவிட்டார். சுக்கிரன் பூலோகம் வந்து சிவலிங்க ஸ்தாபித்து வழிபாடு செய்தார். அந்த இடம் திருநாவலூர் ஆகும்.
கருடனுக்கும் ஆதிசேஷனுக்கும் நடந்த சண்டையில், ஆதிசேஷனின் விஷத்துடன் கருடன் நீல நிறமாக மாறியதாகவும், கருடன் இங்குள்ள சிவபெருமானை வேண்டிக் கொண்டு தனது நோய் நீங்கப் பெற்றதாகவும் நம்பப்படுகிறது.
பூவனூர்ப்புனி தன்றிரு நாமந்தான்
நாவின் நூறுநூ றாயிரம் நண்ணினார்
பாவ மாயின பாறிப் பறையவே
தேவர் கோவினுஞ் செல்வர்க ளாவரே.
- திருநாவுக்கரசர்
கோவலன் நான்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்ய
மேவலர் முப்புரம் தீயெழு வித்தவன் ஓரம்பினால்
ஏவல நார்வெண்ணை நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
நாவல னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே
- சுந்தரர்
கருத்துகள்