இறைவன்: பழமலைநாதர், விருத்தகிரீஸ்வரர்.
இறைவி: பெரிய நாயகி, பாலாம்பிகை, விருத்தாம்பிகை.
தேவாரம் பாடப் பெற்ற தலங்களில் 41 ஆவது தலமும், நடுநாட்டில் உள்ள சோழ நாடு காவிரி தென் கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 9 ஆவது தலம் ஆகும்.
ஆதியில் பிரம்மதேவர் இந்த மண்ணுலகைப் படைக்க விரும்பியபோது சிவபெருமானை துதிக்க அவரும் அருள் செய்தார். பின்னர் தானே ஒரு மலையாகத் தோன்றினார். அதன் பின்னரே பிரம்மா படைத்த மலைகளும் தோன்றின. இந்த மலைகளுக்கெல்லாம் சிவபெருமான் மலையாகத் தோன்றிய மலையே முன்னால் தோன்றியது என்பதால் இது பழமலை (முதுகுன்றம்) என்று பெயர் வந்தது (விருத்தம் - பழமை, அசலம் -மலை). இத்தலத்து இறைவன் பழமலைநாதர் என்றும் வழங்கப்படுகிறார். இத்தலத்தின் பெயரில் 'குன்றம்’ என்ற சொல் இருப்பினும், காண்பதற்கு மலை ஏதுமில்லை. குன்று பூமியினடியில் அழுந்தியிருப்பதாகத் தலவரலாறு கூறுகிறது. இதற்கேற்ப இப்பகுதியில் பூமிக்கடியில் பாறைகளே உள்ளன. எல்லா மலைகளும் தோன்றுவதற்கு முன்னரே இம்மலை தோன்றி மறைந்தமையால் இதற்குப் பழமலை எனப் பெயர்.
இங்கு இறப்பவர்களுக்கெல்லாம் உமாதேவியார் தமது ஆடையால் வீசி இளைப்பாற்ற, இறைவன் அவர்களுக்கு ஐந்தெழுத்தை உபதேசித்துத், தமது உருவமாக்கும்(சாரூப நிலை) திருப்பதி. ஆதலால், இது காசியினும் மேம்பட்டதாகும். இத்தலத்திற்கு 'விருத்த காசி' என்றும் பெயருண்டு. இத்தலத்தின் தல விருட்சமான வன்னிமரம் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆதி காலத்தில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்த விபசித்து முனிவர் திருப்பணி வேலை செய்தவர்களுக்கு இந்த வன்னிமரத்தின் இலைகளைப் பறித்து கூலியாக கொடுத்தார் என்றும் அவை அத்தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ப பொற்காசுகளாக மாறியது என்று தலபுராணம் கூறுகிறது.
சம்பந்தரால், இத் தலத்தை அடையும்போதும், வலஞ் செய்தபோதும், வழிபட்டபோதும் தனித்தனிப் பதிகங்கள் பாடியருளப்பெற்ற பெருமையுடையது.சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்று எண்ணி, சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுத்தா நதியில் வீசி விட்டு, திருவாரூரில் கமலாலய குளத்தில் சென்று படி அருள் செய்தார்.
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட தொத்தார்தரு மணிநீள்முடிச்சுடர்வண்ணன திடமாம் கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.
- திருஞானசம்பந்தர்
கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக் கருதுவார்க் காற்ற எளியான் றன்னைக் குருமணியைக் கோளரவ மாட்டு வானைக் கொல்வேங்கை யதளானைக்கோ வணவன் றன்னை அருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானை ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க திருமணியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத் தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.
- திருநாவுக்கரசர்
முந்தையூர் முதுகுன்றங் குரங்கணின் முட்டம் சிந்தையூர் நன்றுசென் றடைவான் திருவாரூர் பந்தையூர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி எந்தையூர் எய்தமான் இடையா றிடைமருதே.
- சுந்தரர்






கருத்துகள்