113. திருவலம் (திருவல்லம்)





இறைவன்:  வில்வநாதீஸ்வரர், வல்லநாதர்.

இறைவி: தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை.

ஒரு காலத்தில் வில்வக்காடாக இப்பகுதி இருந்தமையால் இத்தலம் 'வில்வவனம்' - 'வில்வாரண்யம்' எனப்படுகிறது. அக்காட்டில் ஒரு புற்றில் சிவலிங்கம் இருந்தது.  நாள் தோறும் பசு ஒன்று வந்து, அச்சிவலிங்கத்தின்மீது பாலைச் சொரிந்து வழிபட்டது. 

ஊருக்குள் 'நிவா' ('பொன்னை') நதி ஓடுகிறது; நதியின் கரையிலேயே கோயில் உள்ளது. இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு, 'நீ, வா' என்றழைக்க, இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது. 'நீ வா ' நதி நாளடைவில் 'நிவா ' நதியாயிற்று என்கின்றனர். 

தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 10 ஆவது தலம் ஆகும்.   நந்தியெம்பெருமான் இத்தலத்தில் சுவாமியை நோக்கியிராமல் வெளி நோக்கி இருப்பதற்குரிய காரணத்தை தலபுராணம் விவரிக்கிறது. அடியவர் ஒருவர் இத்தலத்திலிருந்து சுமார் 5 கி.மி. தொலைவலுள்ள கஞ்சனகிரி மலையிலுள்ள திருக்குளத்திலிருந்து இறைவன் அபிஷேகத்திற்கு தினமும் நீர் எடுத்து வருவது வழக்கம். கஞ்சன் எனும் அசுரன் அடியவரை நீர் எடுக்கவிடாமல் துன்புறுத்தவே மனம் வருந்திய அவர் இறைவனிடம் முறையிட்டார். சிவபிரான் நந்திதேவரை அனுப்பினார். நந்தியெம்பெருமான் அசுரனை தன் கொம்புகளால் குத்தி எட்டு பாகங்களாக கிழித்து போட்டார். சிவனிடம் சாகா வரம் பெற்றிருந்த அந்த முரடன், நந்தியின் தாக்குதலில் இருந்து தப்பி விட்டான்.  கஞ்சனால் மீண்டும் இன்னல் வராமல் தடுக்கவே நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது. 


எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்