114. திருநெல்வாயில் அரத்துறை (திருவட்டுரை, திருவட்டத்துறை)











இறைவன்:  அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர், தீர்த்தபுரீஸ்வரர்.
இறைவி: அரத்துறைநாயகி, ஆனந்த நாயகி, திரிபுர சுந்தரி.


நிவாநதிக்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோயில் பாடல் பெற்ற தலங்களில் 33 ஆவது தலம் மற்றும் தொண்டை நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 1 ஆவது தலம் ஆகும்.  சப்தரிஷிகள் பூஜை செய்ய தீர்த்தம் வேண்டி இறைவனை வேண்ட, சிவபெருமான்  நீ வா என்று அழைத்ததாக  இதுவே நிவா நதியாகவும்  வடவெள்ளாறாகப்  பெயர் கொண்டு அமைந்துள்ளது.

திருஞானசம்பந்தருக்கு அரத்துறைநாதர் முத்துச் சிவிகையும், முத்துக்குடையும், முத்துச் சின்னங்களையும் வழங்கி அருளிய தலம் இதுவாகும். திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடி கொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார். சம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார் சம்பந்தரைத் தூக்கிக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. திருதூங்காணைமாடம் சிவஸ்தலத்தை தரிசித்து திருநெல்வாயில் அரத்துறை நோக்கி செல்லும் போது தந்தை தோள்மீது எழுந்தருள்வதை விட்டு நடந்தே சென்றார். சம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். திருநெல்வாயில் அரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற இடத்தில் இரவு தன் அடியார்களுடன் சம்பந்தர் தங்கினார். அன்றிரவு திருநெல்வாயிலிலுள்ள அடியார்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி சம்பந்தர் கால்கள் நோகாமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும் அவற்றை சம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதே போன்று சம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விபரங்களைக் கூறி முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டர். மறுநாள் காலை திருநெல்வாயில் அரத்துறை அடியார்கள், கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு மாறன்பாடி சென்று சம்பந்தரிடம் கொடுத்து, அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து, முத்துக்குடை நிழலில் அரத்துறைநாதர் ஆலயம் அழைத்து வந்தனர். சம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது பதிகம் பாடி வணங்கினார்.

நிவா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, அதனால் சேதம் உண்டாகாமல் இருக்க நந்தியம்பெருமான் தலையைச் சற்று திரும்பி வெள்ளத்தைப் பார்க்க, வெள்ளம் வடிந்ததாக சொல்லப்படுகிறது.

எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர்கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லால் சென்று கைகூடுவ தன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.
- திருஞானசம்பந்தர்

புனல்ஒப்பானைப் பொருந்தலர் தம்மையே
மினலொப்பானை விண்ணோரும் அறிகிலார்
அனலொப்பானை அரத்துறை மேவிய
கனலொப்பானைக் கண்டீர்நாம் தொழுவதே.
- திருநாவுக்கரசர்

 கல்வாய்அகி லுங்கதிர் மாணியும்
      கலந்துந் திவருந்நிவாவின்  கரைமேல்
 நெல்வாயில் அரத்துறை நீடுறையும்
      நிலவெண்மதி சூடிய நின்மலனே
  நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
      நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
  சொல்லாய்க் கழிகின்றது அறிந்தடியேன்
      தொடர்ந்தேன் உய்யப்போ வதோர்சூழல் சொல்லே.
- சுந்தரர்

கருத்துகள்