116. திருஎருக்கத்தம்புலியூர் (ராஜேந்திரப்பட்டணம்)





இறைவன்:
  நீலகண்டேஸ்வரர், சுவேதார்க்கவனேஸ்வரர், திருக்குமாரசாமி .

இறைவி: வீறாமுலையம்மை, நீலமலர்கண்ணி, நீலோற்பலாம்பாள்.

இத்திருக்கோயில் பாடல் பெற்ற தலங்களில் 36 ஆவது தலம் மற்றும் நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 4 ஆவது தலம் ஆகும்.  

பஞ்ச புலியூர்த்தலங்களில் திருஎருக்கத்தம்புலியூர்  தலமும் ஒன்றாகும். மற்ற 4 தலங்கள்: 1) திருப்பாதிரிப்புலியூர் 2) பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்) 3) திருப்பெரும்புலியூர் 4) ஓமாம்புலியூர்

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தினரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வடமொழியில் வியாக்ரம் என்றால் புலி) என்று பெயர் வந்தது. தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். இந்த வீயாகரபாதர் வழிபட்ட தலங்களில் திருஎருக்கத்தம்புலியூர் தலமும் ஒன்றாகும். எருக்கினைத் தல விருட்சமாக உடைய புலியூராதலின் திருஎருக்கத்தம்புலியூர் என்று பெயர் பெற்றது.

கைலாயத்தில் சிவன் வேதங்களின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் போது பார்வதியின் கவனம் சிதறியது. அதனால் அவளை பரதவர் குலத்தில் மீனவப் பெண்ணாகப் பிறக்குமாறு இறைவன் சபித்தார். இதனால் கோபமடைந்த முருகன், தன் தாயை சிவபெருமான் சபிப்பதற்கு காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார். முருகனின் இச்செயலுக்காக இறைவன் அவரை மதுரையில் தனபதி என்பவரின் மகனாக உருத்திரசர்மர் என்ற பெயரில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார். உரிய வயது வந்த போது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். கடைசியாக எருக்கத்தம்புலியூர் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டுப் பேசும் திறன் பெற்றார். குமரன் வழிபட்டதால் சிவன் திருக்குமாரசாமி என்ற பெயரிலும் இத்தலத்தில் விளங்குகிறார். 

ராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும், அவனுடைய மகன் ராஜேந்தர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம்.
படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
உடையான் உமையோடும் உடனாய் இடுகங்கைச்
சடையான் எருக்கத்தம் புலியூர்தகு கோயில்
விடையான் அடியேத்த மேவா வினைதானே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்