இறைவன்: நீநர்த்தனவல்லபேஸ்வரர், நெறிகாட்டுநாதர்.
இறைவி: பராசக்தி, ஞானசக்தி (புரிகுழல்நாயகி).
இத்திருக்கோயில் பாடல் பெற்ற தலங்களில் 35 ஆவது தலம் மற்றும் நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 3 ஆவது தலம் ஆகும். மணிமுத்தாறும் வெள்ளாறும் கூடும் இடத்தில் உள்ள ஊராதலின் கூடலையாற்றூர் என்று பெயர் பெற்றது. சிதம்பரத்தில் வியாக்ரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தனது நடனக் காட்சியை காட்டி அருளினார் சிவபெருமான். அந்த நடனக் காட்சியைத் தானும் காண விரும்பி பிரம்மா இத்தலத்தில் இறைவனை வழிபட்டு வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்று பிரம்மாவிற்கும் சரஸ்வதிக்கும் நர்த்தனம் ஆடி அருள் செய்தார். எனவேதான் இத்தல இறைவன் நர்த்தன வல்லபேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
திருப்புறம்பியம் தலத்தில் தங்கி சில காலம் பாடிப்பணிந்து திருமுதுகுன்றம் செல்ல விரும்புகிறார் நம்பி ஆரூரர். அப்படி செல்லும் வழியில் திருக்கூடலையாத்தூர் வந்து அடைகின்றார். சிவபிரானின் திருபதி என்றறியாமலே செல்லும் பொழுதில் ஏகம் பரம்பொருளாகிய சிவபெருமான் ஒரு வேதியர் வடிவில் தோன்றி, சிவா வேடமாகிய உருத்திராக்கம், சடாமுடி, முப்புரி நூலுந்தாங்கி எதிர் செல்கிறார். அப்பொழுது நம்பி ஆரூரர் அவ்வேதியரிடம் திருமுதுகுன்றம் செல்லும் வழி கேட்க, சிவபெருமான் திருக்கூடலையாத்தூர் செல்லும் வழி இதுவே ஆகும் என்று சொல்லி மறைய, நம்பி ஆரூரர் இத்திருக்கோயில் வந்தடைந்து 'வடிவுடை மழு' என்ற திருப்பதிகம் பாடியபின்னர் திருமுதுகுன்றம் சென்றடைந்தார்.
வடிவுடை மழுஏந்தி மதகரி உரிபோர்த்துப் பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும் கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில் அடிகள்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே
- சுந்தரர்
கருத்துகள்