121. தென்குடித்திட்டை (திட்டை)



தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 132 ஆவது தலமும்,  சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 15ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  வசிஷ்டேஸ்வரர், பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், தேரூர்நாதர், தேனுபுரீஸ்வரர்.

இறைவி: உலகநாயகி, மங்களாம்பிகை, மங்களேஸ்வரி, சுகந்தகுந்தளாம்பிகை.

காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும் தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் அமிழ்ந்திருந்த போது திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது.

மூலவர் சுயம்புத் திருமேனி. பிரமரந்திரத்திலிருந்து சிவலிங்கத் திருமேனியின் மீது நீர் சொட்டுவது இத்தலத்தில் வியப்புக்குரிய ஒன்றாகும். 25 மணித்துளிகளுக்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் சுவாமிமீது இன்றும் சொட்டுகிறது. தொன்றுதொட்டு, சுவாமியின் விமானத்துள் சந்திரகாந்தக்கல் இருந்து வருவதாகவும், அதுவே சந்திரனின் ஈரத்தை வாங்கித் தேக்கி வைத்துச் சொட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆங்கிரசர் முனிவரின் ஏழாவது குழந்தை வியாழன். சகல கலைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தேவர்களுக்கு குருவானார். குருவின் வழிகாட்டலில் தேவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஒருநாள் குரு இந்திரனை பார்க்கச் சென்றார். ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், குருவை அலட்சியம் செய்தான். குருவுக்கு ஆத்திரம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட அவர் ஒரு மறைவிடத்தில் வாழத் தொடங்கினார். சரியான வழிகாட்டல் இல்லாததால் தேவலோகமே ஸ்தம்பித்தது. அரக்கர்கள் தேவர்களை கொடுமைப் படுத்தினார்கள். தவறை உணர்ந்த இந்திரன், எங்கெங்கெல்லாம் சிவத்தலங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று குருவை தேடினான். அப்படித் தேடிவரும் வழியில்தான் திட்டைக்கு வந்தான். வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மனமுருக மன்னிப்பு கேட்டு வேண்டிக்கொண்டான். இனியும் அவனை சோதிக்க விரும்பாத குரு, அவனுக்கு காட்சி தந்தார். இந்த சிவாலயத்திலேயே தனி சந்நதியும் கொண்டார்.
முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே. 
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்