தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 75 ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 21ஆவது சிவத்தலமாகும். ஊழிக் காலத்தும் இத்தலம் அழியாது இருப்பதால் இஃது 'நீடூர் ' என்று பெயர் பெற்றது.
இறைவன் : அருட்சோமநாதேஸ்வரர், நிருத்தகானப்பிரியர், கானநிர்த்தனசங்கரர், பத்ரகாளீஸ்வரர்.
இறைவி : ஆதித்ய அபயப்ரதாம்பிகை, வேதநாயகி, ஆலாலசுந்தரநாயகி, வேயுறுதோளியம்மை.
தலமரம் மகிழமாதலின் மகிழவனம், மகிழாரண்யம், வகுளாரண்யம் எனவும் இத்தலத்திற்கு பெயர்களுண்டு.
இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் தேவேந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மணலால் உருவாக்கப்பட்ட இந்த சிவலிங்கத்தை கிருத யுகத்தில் இந்திரன் பூஜித்ததாக ஐதீகம்.
அசுரன் ஒருவன் முன்வினைப் பயனால் அடுத்த பிறவியில் நண்டாகப் பிறந்தான். அவன் தன் பாவங்களுக்கு விமோசனம் பெற நாரதரிடம் ஆலோசனை கேட்க,. அவர் இத்தலத்தில் சிவனை வழிபட்டால் விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி நண்டு உருவில் இருந்த அசுரன் இங்கு வந்து காவிரி ஆற்றில் நீராடி சிவனை வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சி கொடுத்தார். அவன் தனக்குள் ஐக்கியமாவதற்கு வசதியாக லிங்கத்தில் துளையையும் ஏற்படுத்திக் கொடுத்தார். நண்டு வடிவில் இருந்த அசுரன், லிங்கத்திற்குள்ளே சென்று ஐக்கியமானான். இப்போதும் ஒரு நண்டு உள்ளே செல்லும் அளவில் லிங்கத்தில் துளை இருப்பதைக் காணலாம்.
பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னைப் பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்
துறவாதே கட்டறுத்த சோதி யானைத் தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் தன்னைத்
திறமாய எத்திசையுந் தானே யாகித் திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நிறமா மொளியானை நீடூ ரானை நீதனேன் என்னேநான் நினையா வாறே
- திருநாவுக்கரசர்
ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக் கார தார்கறை மாமிடற் றானைக் கருத லார்புரம் மூன்றெரித் தானை நீரில் வாளை வரால்குதி கொள்ளும் நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப் பாரு ளார்பர வித்தொழ நின்ற பரம னைப்பணி யாவிட லாமே
- சுந்தரர்
கருத்துகள்