தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 79 ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 25ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்: அருள்வள்ளல் நாயகர், உத்வாக நாதசுவாமி, கல்யாண சுந்தரேஸ்வரர்
இறைவி: யாழினும் மென்மொழியம்மை, கோகிலாம்பாள்.
உமாதேவி மற்றொருமுறை சிவபெருமானை பூவுலகில் மணந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தாள். சிவபிரானும் கருணை கொண்டு அவ்வாறே வாக்களித்தார். அதன்பின் உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். சுய உருவம் பெற்ற உமாதேவி பரத்வாஜ முனிவரிடம் வளர்ந்து வரும் வேளையில் அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்துகொள்ள சிவபெருமான் தீர்மானித்தார். பரத்வாஜ மகரிஷி நடத்திய யாக வேள்விக் குண்டத்தில் சிவபெருமான் தோன்றி பசு உருவில் இருந்த உமாதேவிக்கு சுய உருவம் கொடுத்து இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது. சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்ற இத்தலம் திருமணஞ்சேரி என்று பெயர் பெற்றது.
அன்னை பார்வதி பசு வடிவாக அசுவதை காட்டில் இருந்த இடம் திருஅழுந்தூர் - (தேரழுந்தூர்) என்றும். மகா விஷ்ணு மாடு மேய்ப்பவராக இருந்த இடம் திருக்கோழம்பம் என்றும், இறைவன் சிவபெருமான் அன்னையின் பக்தி கண்டு பசு வடிவிலிருந்த அவரை பெண் உருவாக முக்தி அளித்தது திருவாடுதுறை முக்தி தலம் என்றும், பரத்வாஜ முனிவரின் புத்ர காமேஷ்டி யாகத்தில் பெண் குழந்தையாக அவதரித்த தலம் குத்தாலம் எனவும், திருமணம் வேண்டி புனித நீராடியது திருவேள்விக்குடியிலும், எதிர்கொள்பாடியில் பாலிகை ஸ்தாபனம் எனும் முளை விடும் நிகழ்வும், ஈசன் உடன் திருமணம் நடந்த இடம் திருமணஞ்சேரி எனவும் ஐதீகம்.
அயிலாரும் அம்பத னால்புர மூன்றெய்து குயிலாரு மென்மொழி யாள் ஒரு கூறாகி மயிலாரு மல்கிய சோலை மணஞ்சேரிப் பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே
- திருஞானசம்பந்தர்
பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்
நட்ட நின்று நவில்பவர் நாடொறுஞ்
சட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம்
வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்