126. மேலைத் திருமணஞ்சேரி (எதிர்கொள்பாடி)

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 78 ஆவது தலமும்,  சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 24ஆவது சிவத்தலமாகும்.  

இறைவன்:  ஐராவதேஸ்வரர், மதயானேஸ்வரர்.  

இறைவி: சுகந்த குந்தளாம்பிகை, மலர்குழல்மாது.



பரத்வாஜ மகரிஷி தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் வந்தபோது, சிவபெருமானிடம் அவளை மணந்து கொள்ளும்படி பரத்வாஜ மகரிஷி வேண்டினார். சிவபெருமானும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். பரத்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவபெருமானை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற இறைவன், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் இத்தலத்திற்கு எதிர்கொள்பாடி என்றும், சுவாமிக்கு திருஎதிர்கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டானது. ஐராவதம் என்னும் இந்திரனின் யானை வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பிற்காலத்தில் உண்டானது.

துர்வாச முனிவர் ஒருமுறை சிவனை பூஜித்து பிரசாதமாக பெற்ற மலரை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அம்மலரை தன் வாகனமான ஐராவதத்தின் தலை மீது வைக்க, அது அம்மலரை கீழே போட்டு தன் காலால் மிதித்து அம்மலரை அவமரியாதை செய்தது. இதனால் கோபம் கொண்ட துர்வாசரிடம் சாபம் பெற்ற ஐராவதம் சாப விமோசனம் வேண்டி பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றித் திரிந்தது. பூலோகத்தில் பல தலங்களில் சிவபூஜை செய்தது. அப்படி சிவபூஜை செய்த தலங்களில் திருஎதிர்கொள்பாடி தலமும் ஒன்றாகும். இறைவனும் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பெற்றார். ஐராவதம் உண்டாக்கிய தீர்த்தம் ஐராவத தீர்த்தம் என்ற பெயருடன் இங்கு உள்ளது.

மத்த யானையேறி மன்னர்சூழ வருவீர்காள்
செத்த போதிலாருமில்லை சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த வுள்ளமாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே.
- சுந்தரர்

கருத்துகள்