127. திருத்துருத்தி (குத்தாலம்)

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 154 ஆவது தலமும்,  சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 37ஆவது சிவத்தலமாகும்.  















இறைவன்: உத்தரவேதீஸ்வரர், சொன்னவாறு அறிவார், கற்றளி மகாதேவர் 

இறைவி: மிருதுமுகிழாம்பிகை, பரிமள சுகந்த நாயகி, அரும்பன்ன வனமுலையாள்.

திருவாவடுதுறை தலத்தில் அம்பாள் பசு வடிவம் நீங்கப் பெற்று சுய உருவம் அடைந்ததும் சிவபெருமான் காட்சி அளித்தார். ஆனால் திருமணம் நடைபெறவில்லை.  குத்தாலத்தில் தவம் செய்து வந்த பரத்வாஜ முனிவருக்கு அவர் விரும்பியபடி அம்பாள் வேள்விக் குண்டத்தில் இறைவன் விருப்பப்படி ஒரு பெண்ணாகப் பிறந்தாள். ஈஸ்வரனை திருமணம் செய்து கொள்ளும் பொருட்டு தினமும் காவிரிக்குச் சென்று நதியில் நடுவிலிருந்த மணல் மேட்டில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள். 8-ம் நாள் இறைவன் அங்கு லிங்க வடிவில் தோன்றி லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டு அம்பிகையின் கரம் பற்றினார். அம்பிகை நாணம் கொண்டு "சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி தாய் தந்தையர், உற்றார் உறவினர் சூழ என்னைத் திருமணம் முடிக்க வேண்டும்" என்று கூறினாள். உன் விருப்பப்படியே நம் திருமணம் நடக்கும் என்று ஈசன் கூற அம்பிகை முனிவரின் ஆசிரமம் அடைந்தாள். இறைவன் சொல்லிய விதியின்படி தான் திருமணம் செய்து கொள்வதாக அம்பாளுக்கு வாக்களித்து அதன் படியே நடந்து கொண்டதால் இறைவன் நாமம் சொன்னவாரறிவார் என்றாயிற்று.

சங்கிலி நாச்சியாருக்கு திருவொற்றியூரில் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவளைப் பிரிந்து சென்றதால் இரண்டு கண்களையும் இழந்து உடல் நலிந்து திருத்துருத்தி வந்திருக்கிறார். காஞ்சீபுரத்தில் ஒரு கண்ணில் பார்வையை மீண்டும் பெற்றாலும் நலிந்த உடலுடன் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனை மனமுருகி வேண்டி தன்னை மன்னித்தருளும்படி வேண்டினார். இறைவனும் ஆலயத்தின் வடபாகத்திலுள்ள தாமரைக் குளத்தில் நீராடினால் உன் உடற்பிணி தீர்ந்துவிடும் என்று அருளினார். சுந்தரரும் அவ்வாறே செய்ய, நீரிலிருந்து எழும்போது முன்னிலும் பளபளக்கும் திருமேனி எழிலுடன் திகழ்ந்தார். 
வரைத்தலைப் பசும்பொனோடு அருங்கலன்கள் உந்திவந்து
இரைத்தலைச் சுமந்து கொண்டு எறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக்கு இருப்பதே கருதினாய்
உரைத்தலைப் பொலிந்துனக்கு உணர்த்துமாறு வல்லமே
- திருஞானசம்பந்தர்
பொருந்திய குரும்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா
இருத்தியெப் பொழுதும் நெஞ்சுள் இறைவனை யேத்து மின்கள்
ஒருத்தியைப் பாகம் வைத்தங்கு ஒருத்தியைச் சடியுள் வைத்த
துருத்தியம் சுடரி னானைத் தொண்ட னேன் கண்டவாறே. 
- திருநாவுக்கரசர்
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
	வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந்த் எற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார்
	அடியிணை தொழுது எழும் அன்பராம் அடியார்
சொன்னவாறறிவார் துருத்தியார் வேள்விக்
	குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமாறு எம்பெருமானை
	என்னுடம் படும்பிணி இடர் கெடுத்தானை.
- சுந்தரர்
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக்கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்திமேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை
அருந்தியதனால் நாயடியேன் அணிகொள்வதில்லை கண்டேனே
- மாணிக்கவாசகர்

கருத்துகள்