129. திருவெண்காடு

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 65 ஆவது தலமும்,  சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 11ஆவது சிவத்தலமாகும்.  

இறைவன்: சுவேதாரண்யேஸ்வரர், வெண்காட்டு நாதர்

இறைவி: பிரமவித்யாநாயகி




சலந்தரன் மகன் மருத்துவன்; இறைவனை நோக்கித் தவம் செய்தான், இறைவன் காட்சி கொடுத்து சூலத்தைத் தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறியுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்கள் தவம் செய்யவொட்டாதவாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான். அறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார்; மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப் போயிற்று.இஃதையறிந்த இறைவன் சிவபெருமான் கோபமுற்று அவருடைய 5 முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தில் இருந்து அகோரமூர்த்தி தோன்றினார். அகோரமூர்த்தியாக வடிவு கொண்டு வந்து மருத்துவாசுரனை அழித்தநாள் ஞாயிற்றுக்கிழமை பூரநட்சத்திரம்.

இந்திரன் விருத்திராசுரனைக் கொன்ற பாவத்தை இங்கு திருவெண்காடரை வழிபட்டு நீக்கிக்கொண்டான். இந்திரன் ஐராவதம் என்னும் தன் வெள்ளை யானையின் மேல் பவனி வந்தபோது துருவாச முனிவர் தந்த மாலையை மதியாது வாங்கி, யானையின் மத்தகத்தின் மேல் வைக்க, யானையோ அம்மாலையைக் காலிலிட்டு மிதித்தது. துருவாசர் சினந்து யானையைக் காட்டானை ஆகுமாறு சபித்தார். பின்னர் யானை தவறுக்கு வருந்தி, முனிவரைப் பணிந்து சாபவிமோசனம் வேண்டியது. முனிவர், திருவெண்காட்டீசரைச் சென்று தொழச் சாபம் நீங்குமென்றார். அதன்படி ஐராவதம் திருவெண்காட்டில் சில காலம் காட்டானையாகத் திரிந்தது. பின்னர் திருவெண்காட்டில் ஈசான திசையில் தன் பெயரில் ஒரு தடாகம் அமைத்துச் சிவலிங்கம் ஸ்தாபித்து, வழிபாடியற்றி ஈசன் அருள் பெற்று மீண்டும் இந்திரலோகம் சேர்ந்தது. யானை அமைத்த தடாகம் இன்றும் யானை மடு என்று வழங்குகிறது.

உத்தால முனிவரின் புத்திரராகிய சுவேதகேது எட்டு வயதுடன் தம் ஆயுள் முடியுமென்பதை உணர்ந்து திருவெண்காட்டிற்கு வந்து சிவபூசை செய்து கொண்டு இருந்தார், எட்டாம் வயது முடியும் நாளில் எமன் வந்து சுவேதகேதுவின் மேல் பாசத்தை வீச, சிவபூசை தடைப்படுகிறதே என அவர் வருந்த சிவபெருமான் வெளிப்போந்து எமன் வலியை அழித்தருளினார். பின்னர் சுவேத கேது திருவெண்காட்டில் சில காலமிருந்து இறைவனின் ஆடல் கண்டபின் அவன் திருவடியிற் சேர்ந்தார்.

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவெண்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3.  திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை.  சிவபெருமான் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம், காளி தாண்டவம், கெளரி தாண்டவம், முனி தாண்டவம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம், புஜங்க தாண்டவம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம் ஆகிய ஒன்பது தாண்டவங்களை ஆடியுள்ளார்.  திருவெண்காடு நவக்கிரஹங்களில் புதனுக்கு உரிய ஸ்தலமாகும்.

திருஞானசம்பந்தர் இங்கு வந்தபோது, ஊரெல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்ததால், கால் வைக்க அஞ்சி, அம்பாளை 'அம்மையே' என்று அழைத்தார். அம்பாள் அவரைத் தன் இடுப்பில் தாங்கிவந்து சுவாமி தரிசனம் செய்வித்தாள் என்பது செவிவழிச் செய்தி. அதே கோலத்தில் "பிள்ளை இடுக்கி அம்மன்" என்ற பெயரில் அம்பாள் பிரகாரத்தில் நமக்குத் தரிசனம் தருகிறாள் அன்னை.

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே
- திருஞானசம்பந்தர்
பண்காட் டிப்படி யாயதன் பத்தர்க்குக்
கண்காட் டிக்கண்ணில் நின்ற மணியொக்கும்
பெண்காட் டிப்பிறைச் சென்னிவைத் தான்றிரு
வெண்காட் டையடைந் துய்ம்மட நெஞ்சமே. 
- திருநாவுக்கரசர்
படங்கொள் நாகம் சென்னி சேர்த்திப் பாய்பு லித்தோல் அரையில் வீக்கி
அடங்க லார்ஊர் எரியச் சீறி அன்று மூவர்க்(கு) அருள்பு ரிந்தீர்
மடங்க லானைச் செற்று கந்தீர் மனைகள் தோறும் தலைகை யேந்தி
விடங்க ராகித் திரிவ தென்னே வேலை சூழ்வெண் காட னீரே.
- சுந்தரர்

கருத்துகள்