தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 251ஆவது தலமும், பாண்டிய நாட்டு தலங்களில் 7ஆவது சிவத்தலமாகும்.
இறைவன் : விருத்தபுரீஸ்வரர், பழம்பதிநாதர், மகாலிங்கேஸ்வரர்.
இறைவி : பிருகந்நாயகி, பெரியநாயகி.
ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க வேண்டியதாயிற்று. பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்து வந்தார். நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், லிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவமுகத்தை உருவாக்கினார். இது சதுர்முக லிங்கம் எனப்பட்டது. இந்த லிங்கமே இங்கு வழிபாட்டில் இருந்தது.
பிற்காலத்தில், இரண்டாம் சுந்தர பாண்டியன், சோழநாட்டு பாணியையும், பாண்டியநாட்டு பாணியையும் கலந்து ராஜகோபுரமும், விமானமும் மிக உயரமாக அமைக்கப்பட்ட ஒரு கோயிலை எழுப்பினான். மூலஸ்தானத்தில் பிரமாண்டமான ஆவுடையாருடன் கூடிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவரை விருத்தபுரீஸ்வரர் என அழைத்தனர். விருத்தம் என்றால் பழமை. எனவே இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப் படுகிறார்.
தஞ்சை பிரஹதீஸ்வரருக்கு அடுத்தபடி பெரிதாக உள்ள இலிங்க மூர்த்தி இதுவாகும். உயரம் 9 அடி, சுற்றளவு 8 1/2 அடி, ஆவுடையார் சுற்றளவு 33 அடி, கோமுகி 3 1/2 அடி நீளம். சுவாமிக்கு மூன்று முழம் துணியும், ஆவுடையாருக்கு 30 முழம் துணியும் வேண்டும். 'மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற வாசகம் இங்குள்ள இறைவனைப் பற்றியதாகும்.
மின்னியல் செஞ்சடை வெண்பிறையன் விரிநூலினன் பன்னிய நான்மறை பாடியாடிப் பல வூர்கள் போய் அன்னம் அன்னந் நடை யாளோடும் அமரும் இடம் புன்னை நன்மாமலர் பொன்னுதிர்க்கும் புனவாயிலே
- திருஞானசம்பந்தர்
சித்த நீநினை என்னொடு சூளறு வைகலும் மத்த யானையின் ஈர்உரி போர்த்த மணாளன்ஊர் பத்தர் தாம்பலர்பாடி நின்றாடும் பழம்பதி பொத்திலாந்தைகள் பாட்டறாப் புனவாயிலே.
- சுந்தரர்
கருத்துகள்