138. திருவலஞ்சுழி

இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  142ஆவது தலமும்,  சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 25ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  கபர்த்தீஸ்வரர்,  கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிவாணர்.

இறைவி: பிருஹந்நாயகி, பெரிய நாயகி.









தனக்கு அநேக ஆண் குழந்தைகள் இருந்தும், பெண் குழந்தை வேண்டி இத்தலத்து இறைவனை யாயாவரர் என்னும் முனிவர் வேண்டினார். பார்வதி பரமேஸ்வரனும் அவர் முன் தோன்றி, அம்பாளே அவருக்கு மகளாக பிறக்க வரம் அளித்தனர். தங்களது பெண் குழந்தைக்கு யாயாவரர் வேதவதி தம்பதியினர் பிரகதாம்பாள் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.  யவன பருவமடைந்த பிரகதாம்பாள், ஈசனை மணக்க விருப்பமுற்று, வில்வவனத்தில் மணலினால் ஆன சிவலிங்கம் அமைத்து பூசித்து வந்தாள்.  ஜடா தீர்த்த அபிஷேகத்தில்  லிங்கம் கரையாமலிருக்க, மணல் லிங்கத்தை ஆலிங்கனம் செய்ய லிங்கம் உறுதியாயிற்று.  மகளின் விருப்பமறிந்த யாயாவரர் வேதவதி தம்பதியினர், மணம் பேச அகத்தியர் - லோபாமுதரை தம்பதியினரை இறைவனிடம் அனுப்பினார். திருமணம் இனிதே நடந்தேற, இறைவன் திருமணக்கோலத்தில் வலப்புறத்தில் அம்பாளுடன் எழுந்தருளினார். 

ஒருமுறை, குடகு மலை உச்சியில் அகத்தியர் கமண்டலத்தில் அடைபட்ட காவிரியை விநாயகர் காக உருக்கொண்டு கமண்டலத்தை கவிழ்க்க, கிழக்கு நோக்கி வந்த காவிரியை, ஹரித்துவஜன் என்னும் அரசன் மலர் தூவி எதிர் கொண்டு அழைத்தான். ஹரித்துவஜன் காட்டிய  வழியே பாய்ந்த காவிரி ஆறும், தக்ஷிணவர்தம் எனும் திருவலஞ்சுழியில், நாக தேவர்கள் வந்து வழிபடும் பிலதுவாரத்தில் புகுந்தது. பிலதுவாரத்தை மன்னன் பலவாறு அடைக்க முயன்றும் முடியாமல் போகவே, கொட்டையூரில் வசிக்கும் ஹேரண்ட முனிவரை அணுகுமாறு சுவேத விநாயகர் அசரீரியாக கூறினார்.  நடந்ததை அறிந்த ஹேரண்ட முனிவரும், சடையுடன் கூடிய முனிவரோ அல்லது மணிமுடி தரித்த மன்னரோ பிலதுவாரத்தில் புகுந்தால், காவிரி மேலெழும் என உபாயம் கூறினார். இதனைக் கேள்வியுற்ற மன்னனும் தானே பிலதுவாரத்தில் புக முன்வந்தார். ஆனால் மந்திரியும், மற்றவர்களும் மன்னனைத் தடுக்க, ஹேரண்ட முனிவரும் தானே பிலதுவாரத்தில் புக, உள் வாங்கிய காவிரியும் வெளியேறியதால் இத்தலமும் திருவலஞ்சுழி எனப் பெயர்பெற்றது.

தேவலோகத்தில் அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும், வாசுகி பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடையும் பொழுது, வலி தாங்காமல் வாசுகியும் விஷத்தை கக்க ஆரம்பித்தது. அந்த விஷத்தை உண்ட பரமேஸ்வரனும், பாற்கடலில் எழுந்த முறையில் விநாயகரை சிருஷ்டி செய்து வழிபடுமாறு தேவர்களுக்கு ஆணையிட்டார். தேவர்களும் நான்கு யுகங்களாக விநாயகரை வைத்து வழிபட்டு வந்தனர். கலியுகத்தில் அவ்விநாயகரை இந்திரன் தங்க பெட்டகத்தில் வைத்து பூலோகத்திற்கு கொண்டு வந்தான். சுவேத விநாயகரை திருவலஞ்சுழியில் நிறுவ எண்ணிய சிவபெருமானும் ஒரு அந்தண சிறுவனாக உருமாறி, அப்பெட்டியை சுமந்து திருவலச்சுழியில் பலிபீடத்தின் முன் வைத்தார். தேவேந்திரனும் அப்பெட்டியை பெயர்த்தெடுக்க பலவாறு முயன்றும் முடியாமற் போகவே, இறைவனின் திருவுளம் அனுப்பவே என எண்ணி, சுவேத விநாயகரை இத்திருத்தலத்தில் நிறுவி, கலாலாகிய பலகணி செய்து நிறுவினான். 
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்ன(ம்) நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரிசூழ் திருவலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னியாதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே. 
- திருஞானசம்பந்தர்
கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்
        கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
        பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்
        மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணிபோல் கண்டாய் கொட்டையூரிற்
        கோடீச் சரத்துறையுங் கோமான் தானே. 
- திருநாவுக்கரசர்

கருத்துகள்