இறைவன்: பிராணவரதேஸ்வரர்.
இறைவி: மங்களாம்பிகை.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 92ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 38ஆவது சிவத்தலமாகும். இத்தலம் மங்களவிநாயகர், மங்கள விமானம், மங்களாம்பிகை, மங்களதீர்த்தம், மங்கலக்குடி என்னும் ஐந்து மங்களங்கள் இணைந்துள்ள தொடர்பால் பஞ்ச மங்கள க்ஷேத்திரம் என்று சிறப்பு பெற்று விளங்குகிறது.
முன்னொரு காலத்தில் காலமா முனிவர், விதியின் படி தனக்கு தொழு நோய் வரப்போவதை அறிந்து, நவக்கிரஹங்களைக் குறித்து தவமிருந்தார். நவகிரஹங்களும் அவர் முன்ன தோன்றி விரும்பியது யாது? எனக்கேட்க, தனக்கு வரவிருக்கும் தொழு நோய் வராமலிருக்கும் படி அனுக்கிரஹம் செய்யா வேண்டுமென கேட்டார். விதியின் பயனால் ஏற்படுவதை தடுக்கவோ, நீக்கவோ தங்களுக்கு அதிகாரம் கிடையாது என நவரகிரஹங்களும் கூறின. அது கேட்டு முனிவர் கோபங்கொண்டு தனக்கு வரவிருக்கும் தொழு நோய் உங்களுக்கும் வரவேண்டும் என சாபம் அளித்தார். சாபத்தின் விளைவாக தொழு நோயால் பீடிக்கப்பட்ட நவகிரஹங்களும் ஈசனை வேண்டினர். அப்பொழுது வானில் ஓர் அசரீரி தோன்றி நீங்கள் காவேரியின் வடகரையில் இருக்கும் மங்கள ஷேத்திரம் அடைந்து அருகில் இருக்கும் வெள்ளை எருக்கன் வனத்தில் தங்கி, பிராண நாதருக்கு வெள்ளை எருக்கிலையில் தயிர் சாதம் வைத்து நிவேதனம் செய்தால் நோய் நீங்கும் எனக்கூறியது. நவகிரஹங்கள் அவ்வாறு வழிபடவே, பிராணநாதர் அவர்கள் முன்தோன்றி அவர்கள் சாபம் நீங்கச் செய்தார்.
முதலாம் குலோத்துங்க மன்னன் காலத்தில் மந்திரி அனலவானார், மன்னனின் வரிப்பணத்தைக் கொண்டு திருமங்கலக்குடியில் அருள்மிகு பிராணவரதேஸ்வரருக்கு கோயில் கட்டினான். அதையறிந்த மன்னன் சினமுற்று மந்திரியைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான். மந்திரியின் மனைவி இத்தலத்து மங்களாம்பிகையிடம் தனக்கு மாங்கல்யக் காப்பு தருமாறு நெஞ்சுருகி வேண்டினாள். மந்திரி அரசனிடம் சிரச்சேதம் செய்த பின் தன் உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு வேண்டினான். மன்னன் உத்தரவு நிறைவேற்றப்பட்டு, மந்திரியின் உயிரற்ற உடலை எடுத்து வரும்போது திருமங்கலக்குடியை அடைந்ததும், பிராணநாதர் , மங்களாம்பிகை அருளால் அவன் உயிர் பெற்றான். பிராணனைக் கொடுத்ததால் இறைவன் பிராணநாதர் எனவும், மனைவிக்கு மாங்கல்யம் கொடுத்த இறைவியை மங்களாம்பிகை எனவும் பெயர் கொண்டு அழைக்கப்பெற்றனர்.
சீரினார்மணியும் அகில்சந்தும் செறிவரை வாரிநீர் வருபொன்னி வடமங்கலக்குடி நீரின் மாமுனிவர் நெடுங்கை கொடுநீர்தனைப் பூரித்து ஆட்டிஅர்ச்சிக்க இருந்த புராணனே.
- திருஞானசம்பந்தர்
செல்வ மல்கு திருமங்கலக்குடி செல்வ மல்குசிவ நியமத்தராய்ச் செல்வ மல்குசெழு மறையோர் தொழ செல்வன் தேவியொடும் திகழ்கோயிலே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்