140. திருக்கஞ்சனூர்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  90ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 36ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்:  அக்னீஸ்வரர்.

இறைவி: கற்பகாம்பிகை.




பாலவசனம், பராசரபுரம், அக்னிபுரம், கம்சபுரம், முக்திபுரம், மோக்ஷபுரம், பிரம்மபுரம் ஆகிய பெயர்களால் புராணங்களில் குறிப்பிடப்பட்ட இத்தலம் கஞ்சனுர் என வழங்கப்படுகிறது.  திருநாவுக்கரசரால் மதி சூடும் பெருமான் எனப் போற்றப்படும் சுக்கிர தோஷ பரிகார மூர்த்தியவர்.

முன்பொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை பிறந்தது. வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது. திருநீறு, ருத்திராக்ஷத்துடன் திகழ்ந்த அக்குழந்தை, தந்தை எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. வைணவரான சுதர்சனர் இவ்வாறு சிவபக்தராக திகழ்வதில் அவ்வூர் மக்களுக்கு விருப்பமில்லை. அவ்வூர் மக்கள் சொல்லியவாறே அவ்வூர் மக்கள் சொல்லியவாறே பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலிமீதமர்ந்து "சிவமே பரம்பொருள்" என்று அக்குழந்தை மும்முறை கூறியதைக் கண்டவர்கள் வியந்தனர். (இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயில் நடராசர் சந்நிதியிலும் உள்ளது.) இறைவன் தட்சிணாமூர்த்தியாக வந்து சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தார். 



தேவசம்பு என்ற வயோதிக அந்தணர் தனது பசுவிற்க்காக பெரிய புல்கட்டை தலையில் சுமந்து வீட்டிற்கு வந்தார். தாழ்வான மாட்டுக்கொட்டகையில் இடறிய புல்கட்டு அங்கிருந்த இளங்கன்றுவின் மீது விழ, அக்கன்று இறந்து விடுகிறது.  இதைக்கண்டு பதறிய தேவசம்பு 'சிவ சிவ' எனக் கூறினார்.  பசுவினால் உண்டான கோஹத்தி தோஷம் நீங்க  காசிக்கு சென்று கங்கையில் நீராட வேண்டும் என வேதியர்கள் கூறவே, தேவசம்பு தனது ஏழ்மையை குறித்து ஹரதத்தரிடம் முறையிட, ஹரதத்தர் அவரை சமாதானம் செய்து நீ சிவ சிவ எனக் கூறியதால் அந்த பாவம் நீங்கியது.  பசுங்கன்றுவும் சிவகதியடைந்தது எனக்கூறி, அக்னீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திகேஸ்வரருக்கு ஒரு பிடி அருகம்புல் கொடுக்குமாறு கூறினார். தேவசம்புவும் அவ்வாறே செய்ய நந்தியும் அந்த புல்லை உண்டு அருள் தந்தார். அது முதல் நந்தியம் பெருமானுக்கு புல்லுண்ட நந்தி எனப்பெயர் பெற்றது. 



பராசர முனிவரின் சித்த பிரமையை நிவர்த்தி செய்த சிவபெருமான், ஆனந்த பரவசமடைந்த பராசரரின் வேண்டுகோளுக்கிணங்க, தினந்தோறும் அபிஷேகம் கொண்டருளும் விதமாக இத்திருக்கோயில் சபைமண்டபத்தில் கற்சிலையான திருமேனியோடு சிவகாமி அம்மையுடன் காட்சியளிக்கிறார். அப்பெருமானுக்கு நாள் தோறும் அபிஷேகம் நடைபெறும். மற்ற ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும். 

மூவிலைநற் சூலம்வலன் ஏந்தி னானை
        மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை
நாவலனை நரைவிடையொன் றேறு வானை
        நால்வேதம் ஆறங்க மாயி னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை
        அயந்திருமா லானானை அனலோன் போற்றுங்
காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
        கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்