தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 91ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 37ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்: கோடீஸ்வரர், கோடிநாதர்.
இறைவி: திரிபுரசுந்தரி, வடிவாம்பிகை.
மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்தரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்ற தலம்.
கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கற்றளியாக திரும்பக் கட்டப்பட்ட சிறப்பையுடைய தலம்.
தன் கணவனைக் கொன்றுவிட்டு, நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோக காந்தா என்ற பெண்மணி, வாழ்க்கையின் இறுதிகாலத்தில் திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும் யமதூதர்கள் அவளைத் தண்டிக்க நரகலோகம் அழைத்துச் செல்லுகின்றனர். சிவ தூதர்கள் இதை தடுக்க யமதர்மராஜன் சிவபெருமானிடம் வந்து முறையிடுகிறார். தமது தலமான திருக்கோடிக்காவோடு சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும், காலதேச வர்த்தமானங்களால் இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்றும், திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டுவிட்டதால், யமனிடமிருந்து விடுபட்டு, பின் முக்தி அடைகிறாள்.
இன்று நன்று நாளைநன் றென்று நின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டும் போதுமின் மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.
- திருஞானசம்பந்தர்
நெற்றிமேற் கண்ணினானே நீறுமெய் பூசினானே கற்றைப்புன் சடையினானே கடல்விடம் பருகினானே செற்றவர் புரங்கள் மூன்றும் செவ்வழல் செலுத்தினானே குற்றமில் குணத்தினானே கோடிக்காவுடைய கோவே.
- திருநாவுக்கரசர்
கருத்துகள்