தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 95ஆவது தலமும், சோழ நாடு காவிரி வட கரைத் தலங்களில் 41ஆவது சிவத்தலமாகும்.
இறைவன்: சத்யகிரீஸ்வரர், சத்யகிரிநாதர்
இறைவி: சகிதேவியம்மை
![]() |
முன்பொரு காலத்தில் காம்பீலி எனும் நகரத்தில் சிபி சக்ரவர்த்தி எனும் மன்னன் ஆண்டு வந்தான். தனது கிரஹ தோஷத்தை போக்க அவன் தீர்த்த யாத்திரை சென்றான். திரிவேணி சங்கமம், நர்மதை, கோதாவரி நதிகளில் நீராடி தென் நாடு வந்தடைந்தான். இத்தலத்தை அடைந்து சத்யகிரிஸ்வரரை வணங்கி இங்கு சிறிது காலம் தங்கி இருந்தான். அப்பொழுது பிராமணர்களுக்கு பூதானம் செய்ய விரும்பி காஷ்மீரம் முதலிய இடங்களிலிருந்து 360 பிராமண குடும்பங்களை தருவித்தான். அவர்களுக்கு 360 வீடுகளையும் கட்டினான். 360 பிராமண குடும்பத்தவர்களும் வெவ்வேறு ஊர்களிலிருந்து புறப்பட்டு இவ்வூர் எல்லையை அடைந்தனர். அப்பொழுது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பிராமணரின் மனைவி ஓர் ஆண் மகவை பெற்றெடுத்தாள். ஆதலால் அவர்கள் மட்டும் ஊர் எல்லையிலேயே தங்க நேர்ந்தது. மற்றவர்கள் எல்லாம் மன்னனை சென்றடைந்தனர். சிபி சக்கரவர்த்தியும் ஒரு பிராமண குடும்பத்துக்கு, ஒரு வீடும், ஒரு பசுவும் சிறிது நிலமும் தானமாகக் கொடுத்தான். 359 பிராமணர்களுக்கு தானமாக கொடுத்தபின், ஒரே ஒரு பிராமண குடும்பம் மட்டும் இல்லாததால் மன்னன் வருத்தமுற்றான். அரசனின் வருத்தத்தைப் போக்க கைலாச நாதரும், சிவலோக நாயகியும் ஒரு வயோதிக பிராமண தம்பதிகளாக வடிவெடுத்து அந்த தானத்தைப் பெற்று கொண்டார்கள். மறுநாள் சிபி சக்கரவர்த்தி ஒவ்வொரு வீடாகச் சென்று பிராமணர்களை கண்டு யோக க்ஷேமம் விசாரித்தான். கடைசியாக வயோதிக பிராமணரின் வீட்டிற்கு வந்தான். வீடும் உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. ஆதலால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது, அங்கே கைலாச நாதரும், சிவலோக நாயகியும் கோயில் கொண்டிருந்தார்கள். இவ்விடம் சுவாமி வீடு என அழைக்கப்பெற்றது.
63 நாயன்மார்களில் முதண்மையான இடத்தைப் பெற்ற சண்டேசுவர நாயனாரின் அவதார தலம் சேய்ஞலூர். இத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக பிறந்தவர் விசாரசருமன். இவன் தன் இளம் வயதில் சிவனே அனைத்தும் என நினைத்து அதன்படி வாழ்ந்து வந்தான்.அப்பகுதி அந்தணர்களின் பசுக்களை விசாரசருமன் தானே மேய்த்து வந்தான் விசாரசருமன் எப்போதும் சிவசிந்தனையிலேயே இருந்ததால், மண்ணியாற்றங்கரையில் வெண் மணலால் ஆத்திமர நிழலின் கீழ் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தான். அதற்கு பசுக்கள் சொரியும் பாலை அபிஷேகம் செய்தான். விசாரசருமரின் இந்த செயலை பார்த்த சிலர், வேள்விக்கு உபயோகப்படுத்தும் பாலை வீணாக்குவதாக கூறினர். இவனது தந்தையும் இதை கேள்விப்பட்டு, மறைந்திருந்து நடப்பதை பார்த்தார். இதையெல்லாம் அறியாத விசாரசருமன் எப்போதும் போல் நீராடி விட்டு தன் பூஜைகளை தொடர்ந்தான். பசுவின் பாலால் அபிஷேகமும் செய்தான். இதைப்பார்த்த தந்தை அவனை அடித்ததுடன், பால்குடங்களையும் தன் காலால் தட்டி விட்டார். சிவ பூஜையில் ஆழ்ந்திருந்த விசாரசருமன், பூஜைக்கு இடையூறு செய்தவரை ஒரு கோலால் தாக்க, அதுவே மழுவாக மாறி எச்சதத்தரின் கால்களை வெட்டியது. கால்கள் வெட்டப்பெற்றவர் தன் தந்தை என்பதை அறியாத விசாரசருமன் மீண்டும் சிவபூஜையில் ஆழ்ந்தான். இதைக்கண்ட சிவபெருமான் பார்வதியுடன் தரிசனம் தந்து, என் மீது கொண்ட பக்தியால் தந்தையின் கால்களை வெட்டினாய். இனி நானே உனக்கு தந்தையாவேன்", என்று கூறி தன் கழுத்திலிருந்த கொன்றை மாலையை விசாரசருமனுக்கு சூட்டி சண்டிகேஸ்வரர் ஆக்கினார்.
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு மாலடைந்த நால்வர் கேட்க நல்கிய நல்லறத்தை ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.
கருத்துகள்