146. திருவாய்பாடி (திருஆப்பாடி)

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  94ஆவது தலமும், சோழ நாடு காவிரி வட கரைத் தலங்களில் 40ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்: பாலுகந்தநாதர், பாலுகந்தீஸ்வரர்.

இறைவி: பிருகந்நாயகி, பெரியநாயகி  





சண்டேச நாயனார் ஆக்களை மேய்த்த இடமாதலால் இவ்வூர் ஆப்பாடி எனவும், பின்னர் காலப்போக்கில் மருவி திருவாய்ப்பாடி என ஆகியது. விசாரசருமன் சிவபூஜை செய்து முக்தி பெற்ற திருஆப்பாடி தலம்.  ஒப்பற்ற ஆழ்ந்த இறை உணர்வு மிக்க சண்டேசுவரர் நாயனார் இறைவனுக்கான திருமஞ்சனப் பாற்குடத்தை காலால் இடறிய தமது தந்தையின் காலை வெட்டி வீழ்த்தும் சிந்தையோடு கோல் ஒன்றை ஏறிய, அது மழுவாக மாறி தந்தையின் கால்களை வெட்டி வீழ்த்தியது.  தந்தையை பொருட்படுத்தாது தன பூஜையை தொடர்ந்தார். விசாரசர்மரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் தேவியுடன் விடையேறி, நம் பொருட்டால் ஈன்ற தாதை வீழ எறிந்ததால் அடுத்த தாதை இனி உனக்கு நாம் என்று அருளி தாம் உண்ட கலமும், உடுப்பனவும்,  சூடுவனவும்  அவருக்காக்கி சண்டீசனார் என்ற பதம் தந்து சடைக் கொன்றை மாலையை எடுத்து நாயனார் தலையில் சூடிய ஒப்பற்ற தலம் இது. விசாரசர்மர் சண்டேச நாயனார் ஆனார். சண்டீசப் பதமும் பெற்றார். 63 நாயன்மார்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் இவரே.

கடலகம் ஏழினோடும் பவனமும் கலந்த விண்ணும்
உடலகத்து உயிரும்பாரும் ஒள்ளழல் ஆகிநின்று
தடமலர்க் கந்தமாலை தண்மதி பகலுமாகி
மடலவிழ் கொன்றைசூடி மன்னுமாப் பாடியாரே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்