147. திருப்பனந்தாள்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 93ஆவது தலமும், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் 39ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்: செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர், அருணஜடேஸ்வரர்.

இறைவி: பிருகந்நாயகி, பெரிய நாயகி, தாலவனேஸ்வரி 







 
அசுரகுல மகளான தாடகை என்பவள் ((ராமாயணத்தில் வரும் தாடகை அல்ல) தாடகை மகப்பேறு விரும்பித் தவம் இயற்றுங்கால் பிரமதேவன் தோன்றி, ‘நீ தாலவனம் சென்று பூசித்து வழிபட்டால் விரும்பிய பேற்றைப் பெறுவாய்’ எனப் பணித்தனன்.  தாடகையும் அவ்வாறே இத்தலத்திற்கு வந்து தினமும் பூமாலை ஏந்தி  திருப்பனந்தாள் மூலவர் செஞ்சடையப்பரை வணங்கி வருகிறாள்.  ஒரு நாள் அவள் பூமாலையுடன் இறைவனை வணங்க வரும்போது அவளுடைய மேலாடை நெகிழ, அதனை இரு முழங்கைகளாலும் பற்றிக்கொண்டு, மாலை சாத்த முடியால் அண்ணலே! யாது செய்வேன்; எவ்வாறாயினும் இம்மாலையை ஏற்று அடியேனை ஆதரித்தருள வேண்டும்’ என்று பிரார்த்தித்தாள்.  இந்த நிலையில் அவளின் இறை வழிபாட்டை மெச்சி இறைவன் அவள் தனக்கு எளிதாக மாலை அணிவிக்கும் வகையில் தலை தாழ்த்திக் கொடுக்கிறார். இப்படி தாடகையின் பக்தியை உலகறியச் செய்த செஞ்சடையப்பர் குடி கொண்டிருக்கும் இத்தலம் தாடகைஈச்சரம் என்றே அழைக்கப்படுகிறது.

இத்தலத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட சோழ அரசனாகிய வீரசேனனென்பவன், இத்தலத்திறைவன் தாடகையின் அன்புக்காகத் திருமுடி சாய்ந்திருப்பதைக் கேள்வியுற்று இறைவன் திருமுடியை நிமிர்த்தி வழிபட எண்ணினான். யானை குதிரை முதலியவைகளைக் கட்டி இழுப்பித்தான், முயற்சி பயனளிக்கவில்லை கவலைக்கடலில் ஆழ்ந்தான். இச்செய்தி திருக்கடவூர் குங்குலியக்கலய நாயனாருக்கு எட்டியது. அவரும் இத்தலத்திற்கு வந்தார்.      தாமும் அத்திருப்பணியில் ஈடுபட விரும்பினார். யானைகளை அவிழ்க்கச் செய்து தம் கழுத்தில் அரிகண்டமும் இறைவர் கழுத்தில் மெல்லிய கயிறும் பூட்டி இழுத்தார். அரிகண்டம்  குங்கிலியக் கலயர் கழுத்தை அறுக்கத் தொடங்கியது. உடனே பெருமான் தமது திருக்கரத்தைத் தோற்றி சிரசின் மீது வைத்தருள, அறுபட்ட சிரசும் பொருந்தியது. இறைவன் திருமுடியும் நிமிர்ந்தது. அது கண்ட அரசன் அன்புக் கயிற்றால் நாயனார் இழுத்து நிமிர்த்ததைக் கண்டான். வணங்கினான

குங்கிலியக் கலயரின் மகன் இறந்துவிட அந்த உடலை தகனம் செய்ய எடுத்துப் போகும் போது வழியில் உள்ள பிள்ளையார் வழி மறித்து நாக கன்னிகைத் தீர்த்தத்தில் தீர்த்தமாடி வீடு திரும்பச் சொல்கிறார். வீடு சென்ற பின் இறந்த மகன் உயிர் பெற்று எழுகிறான். இத்தகைய பெருமைகள் பெற்றது திருப்பனந்தாள் சிவதலம்.
கண்பொலி நெற்றியினான் திகழ் கையிலொர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகுபீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் திருசெஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே. 
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்