148. திருக்கொட்டையூர்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  98ஆவது தலமும், சோழ நாடு காவிரி வட கரைத் தலங்களில் 44ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்: கோடீஸ்வரர்.

இறைவி: கந்துக கிரீடாம்பாள், பந்தாடுநாயகி.  




ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் சுயம்பு மூர்த்தியாக லிங்கம் வெளிப்பட்டதால் ஊர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. சோழ மன்னனுக்கும் ஏரண்ட முனிவருக்கும் கோடிலிங்கமாகக் காட்சி தந்தமையால் கோடீஸ்வரர் என்று சுவாமிக்கும் கோடீச்சரம் என்று கோயிலுக்கும் பெயர் வந்தது. ஏரண்டம் என்றால் ஆமணக்கு கொட்டைச்செடியைக் குறிக்கும். அதன் கீழிருந்து தவம் செய்தமையால் அம்முனிவர் ஏரண்டமுனிவர் என்று பெயர் பெற்றார்.

கருமணி போல்கண்டத்து அழகன் கண்டாய்
        கல்லால நிழற்கீழ் இருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
        பவளக் குன்றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னி வலஞ் சுழியான் கண்டாய்
        மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குருமணிபோல அழகமரும் கொட்டையூரில்
        கோடீச்சரத்து உறையும் கோமான்தானே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்