149. திருஇன்னம்பர்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  99ஆவது தலமும், சோழ நாடு காவிரி வட கரைத் தலங்களில் 45ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்: எழுத்தறிநாதர், தான்தோன்றியீசர்.

இறைவி: கொந்தார் பூங்குழலி, நித்தியகல்யாணி.  






அம்பர் என்றால் ஆகாயத்தைக் குறிக்கும். இனன் என்றால் சூரியனைக் குறிக்கும்.   ஆகாயத்தில் வலம் வரும் சூரியன் இழந்த தன் ஒளியைப் பெற வேண்டி இத்தல இறைவனை பூஜித்ததால் இத்தலம் இன்னம்பர் என்று பெயர் பெற்றது. ஆவணி 31,  புரட்டாசி 1,2  மற்றும் பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரிய ஒளி  காலையில் சிவலிங்கத் திருமேனி மீது படுகின்றது. இதனை சூரியபூஜை என்று கொண்டாடுகின்றனர்.

தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானை இஙுகுள்ள தடாகத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் சாபத்தைப் போக்கிக் கொண்டதால் இங்குள்ள தீர்த்தம் ஐராவத தீர்த்தம் என்றும் இறைவன் ஐராவதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை சூரியன், சந்திரன், ஐராவதம் என்ற யானை, அகஸ்திய முனிவர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். அகத்திய முனிவருக்கு தமிழ் இலக்கணம் உபதேசித்ததால் எம்பெருமானுக்கு அட்சரபுரீசுவரர் எனப்பெயர். 

இப்பகுதியை ஆண்டு வந்த மன்னனிடம் கணக்கராக பணியாற்றி வந்தார் சுதஸ்மன் என்ற ஆதிசைவர். கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்து வந்த இவரிடம் ஒரு முறை அரசன் வரவு செலவு கணக்குகளைப் பற்றி விசாரித்தான். அரசரிடம் கணக்கை ஒப்படைத்தார் சுதஸ்மன். அரசருக்கு கணக்கில் ஐயம் ஏற்பட்டது. தன் மீது வீண் பழி வருமோ என்று கவலைப்பட்ட சுதஸ்மன் இத்தல இறைவனிடம் வேண்டினார். ஈசன் சுதஸ்மன் உருவில் மன்னரிடம் சென்று மன்னருக்கு கணக்கில் ஏற்பட்ட ஐயத்தைப் போக்கினார். அதனாலேயே இத்தல இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்ற பெய்ரும் ஏற்பட்டது.
எண்திசைக் கும்புகழ் இன்னம்பர் மேவிய
வண்டிசைக் கும்சடையீரே
வண்டிசைக் கும் சடையீர்உமை வாழ்த்துவார்
தொண்டிசைக் கும்தொழி லோரே. 
- திருஞானசம்பந்தர்

விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் போலும்
பெண்ணொரு பாகர்போலும் பேடலி ஆணர்போலும்
வண்ணமால் அயனும் காணா மால்வரை எரியர்போலும்
எண்ணுரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே.
- திருநாவுக்கரசர்

கருத்துகள்