152. திருவைகாவூர்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  102ஆவது தலமும், சோழ நாடு காவிரி வட கரைத் தலங்களில் 48ஆவது சிவத்தலமாகும்.  

இறைவன்: வில்வவனேஸ்வரர், வில்வவனநாதர், மகவருளீசுவரர்.

இறைவி: சர்வஜனரட்சகி, வளைக்கைநாயகி.  






ஒரு காலத்தில் தவநிதி எனும் முனிவர் திருவைகாவூர் எனும் இத்தலத்தில் தங்கியிருந்து வழிபட்டுக்கொண்டிருந்தார்.  அப்பொழுது வேடன் ஒருவன் கொள்ளிடக்  கரையிலுள்ள ஒரு புதரில் ஒரு மானைக் கண்டு அதை துரத்திச் தென்றான். மான் வேகமாக ஓடிச் சென்று அருகிலுள்ள வனத்தில் ஒரு மரத்தடியில் சிவலிங்கம் ஒன்றை பூஜை செய்து கொண்டிருந்த முனிவரிடம் தஞ்சம் அடைந்தது. மானைத் துரத்திச் சென்ற வேடன் முனிவர் இருக்கும் இடத்தை அடைந்தான். மானின் மீது குறி பார்த்து அம்பெய்யச் சித்தமானான். முனிவர் மானை விட்டுவிடும்படி வேண்டினார். மானை விடாவிட்டால் முனிவரையே கொன்று விடுவேன் என்று வேடன் மிரட்டினான். முனிவர் தஞ்சமடைந்த மானை விடமாட்டேன் என்று கூற, அவர் மீது அம்பு தொடுக்க ஆயத்தமானான். அடியார்களை எப்போதும் காக்கும் இறைவன் ஒரு புலி வடிவில் அங்கு தோன்றி வேடனை துரத்தினார். வேடன் அருகிலுள்ள மரத்தின் மீது ஏறிக் கொண்டான். புலி மரத்தடியில் அமர்ந்து கொண்டு அவன் கீழே இறங்கினால் மிடித்துக் கொள்வதற்காக காத்திருந்தது. இரவு வந்துவிட, பயத்தினாலும், பசியினாலும் வேடன் தூங்காமல் மரத்தில் கண் விழித்து உட்கார்ந்திருந்தான். அவ்வாறு மரக்கிளையில் உட்கார்ந்து இருக்கும் போது மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டபடி பொழுதைப் போக்கினான். அன்று மகாசிவராத்திரி தினம். புலியாக மரத்தடியில் இருந்த சிவபெருமான் மீது அவன் பறித்துப் போட்ட இலைகள் விழுந்தன. அவன் உட்கார்ந்திருந்த மரம் விலவமரம். இரவு முழுவதும் சிவபெருமானை வில்வம் கொண்டு அர்ச்சித்ததால் அவனுக்குச் சிவபதம் கிடைத்தது. சிவபெருமான் அவனுக்கு காட்சி அளித்து மோட்சம் அளித்தார். 

சிவராத்திரியை அடுத்த நாள் விடியற் காலையில் வேடன் ஆயுள் முடிகிறது. யமன் அவன் உயிரைப் பறிக்க வந்தான். நந்திதேவர் அவன் வருவதைக் கவனிக்கவில்லை. சிவன் தட்சிணாமூர்த்தி வடிவம் கொண்டு யமனை விரட்டி அடித்தார். யமனை உள்ளே விட்டதற்காக சிவன் நந்திதேவரைக் கடிந்து கொள்ள, நந்தி வெளியே ஓடிவரும் யமனை தன் மூச்சுக் காற்றால் நிறுத்தி விட்டார். பின்னர் யமன் சிவனை வேண்டி மன்னிப்புக் கேட்க, யமனை வெளியேற அனுமதிக்கும்படி நந்திக்கு கட்டளையிட்டார். யமன் தன் பக்தியை இறைவனுக்குக் காட்ட, ஒரு குளம் வெட்டி, அதன் தீர்த்தத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து சில நாட்கள் அங்கு தங்கி இருந்து வழிபட்டுச் சென்றான். யமன் பணி செய்த தீர்த்தம் யம தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் முகப்பு வாயிலுக்கு எதிரே இருக்கிறது. இங்குள்ள நந்தி இறைவனை நோக்கி இல்லாமல், வாசலைப் பார்த்தபடி உள்ளது. யமன் மறுபடி உள்ளே வராமல் இருப்பதற்காக அவ்வறு இருப்பதாக ஐதீகம்.

இத்தலத்தில் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக விளங்குகிறார்கள். பிரளய காலத்தில் தன்னுடைய ஆக்கும் தொழில் அழியாமல் இருக்க பிரம்மா இங்கே ஒரு கேணி உண்டாக்கி சிவபெருமானை வழிபட்டபின் ஆலய துவாரகாலகனாக ஒருபுறம் அமர்ந்து விட்டார். சலந்திரனை அழிப்பதற்காக அவன் மனைவியிடம் ஒரு பொய் கூறினார் திருமால். இதை அறிந்து கொண்ட அவள் மகாவிஷ்ணுவை சபித்தாள். அச்சாபம் தீரவே திருமால் இங்கே துவாரபாலகனாக நின்று தவம் புரிகிறார் என்கிறது தலபுராணம்.  சிவராத்திரி அன்று தூங்கும் ஒரு குழந்தையின் நகையைத் திருட முயன்ற திருடன் அக்குழந்தையைக் கொலை செய்ததாகவும், அடியார் பிராத்தனைக்கு இரங்கி இறைவன் அக்குழந்தையை உயிர்ப்பித்ததாகவும், இதனால் இறைவனுக்கு மகவருளீசுவரர் எனப்பெயர் ஏற்பட்டது.
கோழைமிடறு ஆககவி கோளும் இல வாகஇசை கூடும் வகையால்
ஏழையடி யார்அவர்கள் யாவைசொன சொல்மகிழும் ஈசன் இடமாம்
தாழைஇள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே. 
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்