தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 183ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 66ஆவது சிவத்தலமாகும். சைவ சமய குரவர்கள் மூவரால் பாடப்பெற்ற 47 தலங்களில் இதுவும் ஒன்று.
இறைவன்: படிக்காசுவைத்த பரமர், சொர்ணபுரீஸ்வரர்.
இறைவி: சிவாம்பிகை,சௌந்திரநாயகி, அழகம்மை.
அழகாபுத்தூர் என்று அழைக்கப்படும் அரிசிற்கரைப்புத்தூருக்கு செருவிலிபுத்தூர் என்றும் பழம் பெயர் உண்டு. இந்த செருவிலிபுத்தூரில் சிவ வேதியர் குலத்தில் தோன்றியவர் புகழ்த்துணை நாயனார். இவர் சொர்ணபுரீஸ்வரருக்கு சிவாகம முறைப்படி தினந்தோறும் பூஜைகள் செய்து வந்தார். வயதாகி தள்ளாமை அவரை ஆட்கொண்டுவிட்ட போதிலும் தினமும் அரிசிலாற்றிலிருந்து நீரைக் கொண்டுவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வதை நிறுத்தவில்லை. முதுமையின் துயரம் போதாதென்று ஊரில் கடும் பஞ்சம் ஏற்பட்ட காரனத்தினால் புகழ்த்துணை நாயனாரை வறுமையும் பற்றிக் கொண்டது. அப்படியும் அவர் தன் கடமையிலிருந்து தவரவில்லை. ஒரு நாள் அரிசிலாற்றிற்குச் சென்று குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டு இறைவன் சந்நிதிக்கு வந்தார். பசி மயக்கத்தில் கால்கள் தள்ளாட, கைகள் நடுங்க குடத்தைத் தூக்கி அபிஷேகம் செய்யச் சென்றார். குடம் தவறி இறைவனின் திருமுடி மீது விழுந்தது. சிவலிங்கத்தின் மீது விழுந்த குடத்தால் சிவபெருமானின் தலையிலேயே அடிபட்டு விட்டதாக எண்ணி புகழ்த்துணை நாயனார் மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த அவர் கனவில் இறைவன் தோன்றி, "பஞ்சம் தீரும் வரை தினமும் உனக்கு பொற்காசு தருகிறேன், அதனால் உன் துனபங்கள் தீரும்" என்று அருளி மறைந்தார். விழித்தெழுந்த புகழ்த்துணை நாயனார் சுவாமிக்கு அருகிலுள்ள பீடத்தில் பொற்காசு இருக்கக் கண்டார். அதே இடத்தில் தினமும் அவருக்கு ஒரு பொற்காசு கிடைத்தது. அதைக் கொண்டு வறுமையை விரட்டி, இறைவனுக்கு மேலும் சிறந்த தொண்டு செய்து இறுதியில் இறைவன் திருவடியில் ஐக்கியமானார். இதனால் இறைவனுக்கு "படிக்காசு அளித்த நாதர்" என்ற பெயரும் ஏற்பட்டது.
மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே துன்னும் கடல்நஞ்சு இருள்தோய் கண்டர்தொல்மூதூர் அன்னம் படியும் புனலார் அரிசில் அலை கொண்டு பொன்னும் மணியும் பொருதென் கரைமேல் புத்தூரே.
- திருஞானசம்பந்தர்
முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப் புத்தூ ரன்அடி போற்றி என் பார்எலாம் பொய்த்தூ ரும்புலன் ஐந்தொடு புல்கிய மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே.
- திருநாவுக்கரசர்
மலைக்கும்மகள் அஞ்ச மதகரியை உரித்தீர் எரித்தீர் வருமுப் புரங்கள் சிலைக்குங் கொலைச் சேவுகந்து ஏறுஒழியீர் சில்பலிக் கில்கள்தோறும் செலவுஒழியீர் கலைக்கொம்பும் கரி மருப்பும் இடறிக் கலவம் மயிற்பீலியுங் கார் அகிலும் அலைக்கும் புனல்சேர் அரிசில் தென்கரை அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
- சுந்தரர்
கருத்துகள்