155. குடவாயில் (குடவாசல்)

 தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  211ஆவது தலமும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 66ஆவது சிவத்தலமாகும். 

இறைவன்: கோணேஸ்வரர், சூரியேஸ்வரர், ப்ருகநாதர்.

இறைவி: பெரிய நாயகி. 




பிரளய காலத்தில் உயிர்கள் அனைத்தையும் ஓர் அமுதக் குடத்தில் இட்டு, அதன் வாய்ப்பகுதியில் சிவலிங்கமாக இருந்து சிவபெருமான் காத்தார்; குடத்திலிட்டுக் காத்த உயிர்களை, மீண்டும் படைப்புக் காலத்தில் வேடன் வடிவெடுத்து வந்த சிவபிரான் வில்லால் அக்குடத்தை உடைத்தார்.. குடம் மூன்றாக உடைந்து, முதற்பாகமாகிய அடிப்பாகம் விழுந்த இடத்தில் இறைவன் திருமேனி கொண்டார். அதுவே குடமூக்கு எனப்படும் கும்பகோணம் (ஆதிகும்பேசம்) ஆகும். அடுத்து நடுப்பாகம் விழுந்த இடமே கலயநல்லூராகும். குடத்தின் முகப்பு பாகம் விழுந்த இடமே குடவாயில் என்னும் குடவாசல்.

கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன் அருளால் சோழ நாட்டின் பேரரசனாக பிறக்கும் பேறு பெற்றான். முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டிற்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய அத்தகைய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.

காசியப முனிவரின் இரண்டு மனைவிகளில் ஒருத்தியான விநதை இளையவள். அவளின் மகன் கருடன். ஒரு சமயம் கருடன் பெரியன்னை கேட்டபடி தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தை எடுத்து வந்தான். பூலோகத்தில் குடவாயிலுக்கு அருகே பறந்து வரும்போது ஒரு அசுரன் எதிர்பட்டு அமிர்த குடத்தை பறிக்க முற்பட்டான். கருடன் அருகிலிருந்த ஒரு பெரிய புற்றின் மீது தர்ப்பைகளைப் பரப்பி, அதன் மீது குடத்தை வைத்துவிட்டு, அசுரனுடன் மூர்க்கமாகப் போர் புரிந்து அவனை வீழ்த்தினார். இதற்குள் அந்த புற்றுக்குள்ளே இருந்த இறைவன் கோணேசப் பெருமான் அந்த அமிர்த குடத்தை மெள்ளத் தம்மிடம் இழுத்துக் கொண்டார். அசுரனை வீழ்த்திவிட்டு வந்த கருடன் அமிர்த குடத்தைக் காணாமல் அந்த புற்றைத் தன் மூக்கால் கிளறியபோது சுவாமி புற்றிலிருந்து வெளிவந்து கருடனுக்கு தரிசனம் தந்தார். கோணேசப் பெருமான் அருளாணைப்படி கருடன் இத்தலத்தில் இறைவனுக்கு ஆலயம் ஒன்றை எழுப்பினார். கருடாழ்வார் கொண்டு வந்த அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்படவராதலால் கோணேசர் அமிர்தலிங்கமானார்இதனால் திருமதிலின் மேல் கருடன் உருவங்கள் உள்ளன.  அனுமனும் இத்தல இறைவனை வழிபட்டிருக்கிறார். 
திகழுந்திரு மாலொடு நான்முகனும்
புகழும்பெரு மானடி யார்புகல
மகிழும்பெரு மான்குட வாயின்மன்னி
நிகழும்பெருங் கோயில் நிலாயவனே.
- திருஞானசம்பந்தர்

கருத்துகள்